header ads

News Ticker

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள, சிக்கலான குகை அமைப்பு ஒன்றுக்கு சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும், திடீர் மழை வெள்ளத்தால் சுமார் 1 கி.மீ. ஆழத்தில் சிக்கிக் கொண்டனர். 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரிய வந்தது. பிறகு, மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட, மிக ஆபத்தான மீட்பு நடவடிக்கை மூலம் அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர். இந்த மீட்புப் பணியை சிறுவர்களின் நலம் குறித்த பதற்றத்தோடும், மீட்புப் பணியின் சாகசத் தன்மை குறித்த ஆச்சரியத்தோடு உலகம் உற்று நோக்கி வந்தது. ‘காட்டுப் பன்றிகள்’ என்று பெயரிடப்பட்ட இந்த சிறுவர் கால்பந்து அணி குகையில் தொலைந்து போனது முதல், மீட்கப்பட்டது வரையிலான 17 நாள் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் இங்கே..

  எப்படிக் காணாமல் போனார்கள்?

 தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்கள் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்து யாரோ குகைக்குள் சிக்கிக் கொண்டதை அறிந்துகொண்ட அதிகாரிகள், அரசை உஷார் படுத்தியதை அடுத்து அவர்களைத் தேடும் பணி அன்றிரவே தொடங்கியது. இப்படித்தான் மீட்பார்கள்…. அவர்கள் உள்ளே சென்றிருந்த நிலையில், திடீரெனப் பெய்த பெருமழையும், அதையடுத்து குகைக்குள் பாய்ந்த காட்டு வெள்ளமும் குகையின் வெளியேறும் வாயில்களை அடைத்துக் கொண்டதால், இந்த 13 பேர் அணி, ஒதுங்குவதற்கு சற்று மேடான இடத்தைத் தேடி குகைக்குள் பின்னோக்கிச் சென்றதாகத் தெரிகிறது. ஆனால், வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. இந்த விவகாரம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் குகை மீட்பு வல்லுநர்கள் உள்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர். 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர். இந்த குகை அமைப்பு ஒரு மலையின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் இருந்து சிறுவர்கள் சிக்கியுள்ள இடம் சுமார் 1 கி.மீ. ஆழத்தில் இருந்தது. சிறுவர்களோடு பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் நிகழ்த்திய உரையாடல் அடங்கிய விடியோ பதிவு ஒன்றும் வெளியானது, எல்லோருக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்தது. எனினும், குகையில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ஒன்று சிறுவர்கள் முக்குளிக்கக் கற்றுக் கொண்டு வெள்ளம் சூழ்ந்த குகையை நீந்திக் கடக்கவேண்டும் அல்லது வெள்ளம் வடியும் வரை சுமார் 4 மாதம் குகையிலேயே காத்திருக்கவேண்டும் என்று தாய்லாந்து ராணுவம் அறிவித்தது. அப்போதுதான் மீட்புப் பணி அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை என்பதை உலகம் உணர்ந்தது. ஒருபுறம் குகையில் இருந்த தண்ணீரை மோட்டார் வைத்து இறைக்குப் பணி மேற்கொள்ளப்பட்டது. மறுபுறம் குகையின் ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு உணவு, மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை சப்ளை செய்யும் பணியை தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர்கள் மேற்கொண்டனர். நான்கு மாதமும் இப்படியே உணவும் மருந்தும் சப்ளை செய்து அவர்களை காத்திருக்கச் செய்யலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், ஒவ்வொரு முறை ஒரு முக்குளிக்கும் வீரர் குகைக்குள் சென்று திரும்புவது மிகக் கடினமான, ஆபத்தான, பல மணி நேரம் பிடிக்கும் பயணமாக இருந்தது. சிக்கிக் கொண்ட சிறுவர்களும், பயிற்சியாளரும் குகையில் இருந்து குடும்பத்தினருக்கு எழுதி அனுப்பிய கடிதங்கள் மனதை உருக்கின. தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி உயிரிழந்தார்.

  மீட்புத் திட்டம்

 இது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, இது எவ்வளவு ஆபத்தான பணி என்பதையும் காட்டியது. அத்துடன், முன்னரே திட்டமிட்டபடி சில மாதங்கள் காத்திருப்பதில் ஒரு சிக்கலும் ஏற்பட்டது. தாய்லாந்தில் சில நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்பட்டதால், இந்தக் குகை மேலும் வெள்ளமயமாகும் அபாயம் என்று மீட்புக் குழு அஞ்சியது. இதனால், ஆபத்தான வழி என்றாலும், சிறுவர்களை போதிய பாதுகாப்பு உடையோடு முக்குளிக்க வைத்து, மீட்பது என்று முடிவெடுத்தனர். குகையின் உள் பகுதி சில இடங்களில் 33 அடி உயரம் வரை இருந்தாலும், சில இடங்கள் மிகவும் குறுகலானவை. ஒரு இடம் வெறும் 40 செ.மீ. அகலம் மட்டுமே உடையது. மீட்புப் பணியாளர்கள் தங்கள் காற்று உருளையையோடு அந்த இடங்களை நீந்திக் கடப்பது கடினம். எனவே, அவர்கள் தங்கள் உருளையை கழற்றி எடுத்துக் கொண்டுதான் அந்த இடங்களைக் கடக்க முடியும். இந்நிலையில் ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு திட்டமிடப்பட்டது. மீட்பு வீரர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்கெனவே மீட்புப் பாதை நெடுக ஒரு கயிறு போடப்பட்டுள்ளது. அதன் வழியாக இரண்டு மீட்பு வீரர்களும் ஒரு சிறுவரும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

  முழு முகத்தையும் மூடும் கவசம்

 சிறுவனின் காற்றுக் குடுவையை ஒரு மீ்ட்பு வீரர் சுமந்து வரும் வகையிலும், ஒரு வீரரோடு, மீட்கப்படும் ஒரு சிறுவன் கயிற்றால் இணைக்கப்பட்டிருக்கும் வகையிலும் மீட்புப் பணி திட்டமிடப்பட்டது. மீட்கப்படும் சிறுவர்களின் முழு முகத்தையும் மூடும் வகையில் மூச்சுக் கவசம் பொருத்தப்படும். இது போதிய பயிற்சி இல்லாத சிறுவர்கள் முக்குளித்து நீந்த உதவியாக இருக்கும். ஆனால் மீட்புப் பாதை என்பது வெறும் நீந்தும் வகையில் மட்டும் இல்லை. நடப்பது, பாறை ஏறுவது, சேற்றில் நடப்பது போன்றவற்றையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சேம்பர் ‘சி’ என்ற இடத்தை அடைந்த பிறகு அவர்கள் ஓய்வெடுத்துவிட்டு நடந்தே வந்துவிடலாம். அந்த இடத்தில்தான் மீட்புப் பணியாளர்கள் முகாம் அமைத்திருந்தனர். குகைக்குள் சிறுவர்கள் சிக்கியுள்ள இடத்தில் காற்றில் ஆக்சிஜன் விகிதம் வீழ்வது அச்சுறுத்துவதாக இருந்தது. சாதாரணமாக காற்றில் 21 சதவீத ஆக்சிஜன் இருக்கவேண்டும். ஆனால், குகைக்குள் 15 சதவீதம் வரை ஆக்சிஜன் அளவு வீழ்ந்தது. எனவே, மீட்புப் பணியாளர்கள் இதுவரை நூறு ஆக்சிஜன் உருளைகளை சிறுவர்கள் சிக்கியுள்ள இடத்துக்கு கடும் இடர்ப்பாடுகளுக்கு இடையில் கொண்டு சென்றுள்ளனர். அத்துடன், மீட்புப் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், ஒரு மருத்துவர் உள்ளிட்ட 4 முக்குளிக்கும் வீரர்கள் சிறுவர்களுக்குத் துணையாக குகைக்குள் சென்று தங்கிவிட்டனர்.

  மீட்பு

 ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் மீட்புப் பணியில் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தேவைப்படுகிறவர்களை உடனடியாக ஏற்றிச் செல்வதற்கு வசதியாக ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டது. நான்கு பேர் மீட்கப்பட்டவுடன், காற்றுக்குடுவைகளை நிரப்புவதற்காகவும், அடுத்தகட்டத்தை திட்டமிடுவதற்காகவும், இரவு நேரத்தில் மீட்புப் பணி நிறுத்திவைக்கப்பட்டது. திங்கள்கிழமை தொடங்கிய இரண்டாவது நாள் மீட்புப் பணியும் வெற்றிகரமாகவே தொடர்ந்தது. ஆனால், இரண்டாவது நாள் மீட்கப்பட்ட நான்கு சிறுவர்களில் சிலர் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்களும் நலமுடனே இருப்பதாக பின்பு தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை பார்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் யாரும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. எனினும், செவ்வாய்க்கிழமை சில சிறுவர்கள் கண்ணாடி வழியாகத் தங்கள் பெற்றோரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.  சீல்கள்

 செவ்வாய்க்கிழமை மூன்றாம் நாள் மீட்புப் பணியை உற்சாகத்தோடு தொடங்கியது தாய்லாந்தின் கடற்படை சீல் அணி. தொடக்கம் முதல் மீட்புப் பணியை ஒருங்கிணைத்ததும், முன்னணியில் நின்றதும் இந்த அணியே. கடல், வான், நிலப் பரப்புகளில் செயல்படும் உயர் திறன் வாய்ந்த அணிகளையே சீல் அணி என்பர். (SEAL என்ற ஆங்கிலச் சொல், SEA, AIR and LAND என்பதன் முதல் எழுத்துகளின் சுருக்கமே ஆகும்). மூன்றாம் நாள் மீட்புப் பணியை மேற்கொள்ள 19 தாய்லாந்து கடற்படை சீல் வீரர்கள் குகைக்குள் நுழைந்தனர். முதல் இரண்டு நாள்களைப் போல அல்லாமல் செவ்வாய்க்கிழமை மீட்புப்பணி நீண்ட நேரம் பிடிப்பதாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்ததற்கும் மாறாக மிக விரைவிலேயே மீட்புப் பணி வெற்றிகரமாக முடிந்தது. கால்பந்து அணியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் ஆகியோர் வெளியேறிய பிறகே, அவர்களுடன் தங்கியிருந்த மருத்துவர், கடற்படை வீரர்கள் உள்ளிட்ட நான்குபேர் கடைசியாக குகையை விட்டு வெளியேறினர்.

  படிப்பினை

 இயற்கையின் சிக்கலான குகை அமைப்பையும், ஆபத்தான மீட்புப் பணியையும் உலகம் வாய்பிளந்து பார்த்தது. அது மட்டுமல்ல, இடர் கால மீட்பு என்ற துறை படித்துக் கொள்வதற்கு இந்த சம்பவம் மிக அரிதான பாடங்களை அளித்தது. கண்டுபிடிக்கப்படும் வரை முதல் 9 நாள்கள் குகைக்கடியில் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் நம்பிக்கையும், உற்சாகமும் குறையாமல் காத்திருந்த சிறுவர் அணியின் மன உறுதி குறிப்பாக கவனிக்கப்பட்டது. உறுதியோடு இந்த அணியை காத்திருக்கச் செய்ததில் பயிற்சியாளர் ஏக்போலின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் கணித்துள்ளனர். தேச, இன, நிற எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் இருந்து வந்த மீட்புப் பணியாளர்களின் உதவியும், எல்லை கடந்த மானுடத்தின் வாஞ்சையும், எதிர்பார்ப்பும் இந்த நெருக்கடிக்கு ஒரு மனிதாபிமானக் கோணத்தையும் அளித்தன.

No Comment to " தாய்லாந்து குகை: சிறுவர்கள் சிக்கியது முதல் மீட்டது வரை "