header ads

News Ticker

 காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - தொடர் – 01



சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி)


திருச்சிற்றம்பலம்

ஆனைமுகன் ஆறுமுகன்

அம்பிகைப் பொன்னம்பலவன்

ஞான குரு வாணி பதம் நாடு

திருச்சிற்றம்பலம்


கணபதி காப்பு

பூதலத்தில் யாவர்களும் போதருவாய் எந்நாளும்

மாதரசியென்று வாழ்த்துகின்ற – மாரியம்மன்

சீதரனார் தங்கை சிறப்பான தாலாட்டை

காதலுடன் நாம் படிக்க கணபதியும் காப்பாமே.

 

காப்பு பாட்டு

ஒற்றைக் கொம்பா திருமுருகா – எங்கள்

உமையாள் பெற்ற பாலகனே.

ஓரானைக் கண்ணே கண்ணே – எங்கள்

உத்தமியாள் பாலகனே.

ஈரானைக் கண்ணே கண்ணே – எங்கள்

ஈஸ்வரியாள் பாலகனே.

மூவானைக் கண்ணே கண்ணே – எங்கள்

முக்கண்ணனார் தன்மகனே.

நாலானைக் கண்ணே கண்ணே – எங்கள்

நாயகியாள் பாலகனே.

ஐந்தானைக் கண்ணே கண்ணே – எங்கள்

ஐங்கரனே வந்தருள்வாய்.

ஆறானைக் கண்ணே கண்ணே – எங்கள்

ஆறுமுக வேலவனே.

ஏழானைக் கண்ணே கண்ணே – எங்கள்

இளையகன்னி தாயாளம்மா.

எட்டானைக் கண்ணே கண்ணே – எங்கள்

ஈஸ்வரியே வாவேன் அம்மா.

ஒன்பதானைக் கண்ணே கண்ணே – எங்கள்

ஓங்கார மாரியம்மா.

பத்தானைக் கண்ணே கண்ணே – எங்கள்

பத்தினியே வாவேனம்மா.

மாரியுடை தன் மகிமை – இந்த

மாநிலத்தார் யாரறிவார்.

தேவியுடை தன் மகிமை – இந்த

தேசத்தார் யாரறிவார்.

மாரியென்றால் மழை பொழியும் – தாயே

தேவி என்றால் தேன் சொரியும்.

வேப்பிலைக்குள் நீயிருந்து – தாயே

வித்தைகளைச் செய்யேனம்மா.

குரலில்க் குடியிருந்து – தாயே

குரலோசை தாவேனம்மா.

நாவில்க் குடியிருந்து – அம்மா

நல்லோசை தாவேனம்மா.

நாங்கள் என்ன குற்றம் செய்தாலும் தான் – தாயே

எல்லாம் பொறுத்தருள்வாய்.

குறுக்கே படித்தோமென்று – எங்கள்

குரலோசை மங்காமலே.

நடுவே படித்தோமென்று – எங்கள்

நாவோசை மங்காமலே.

சிற்றுடுக்கோ பேசுதில்லை – எங்கள்

தேவியரே வாருமமா.

பெரிய உடுக்கோ பேசுதில்லை – எங்கள்

பேச்சியரே வாருமம்மா.

காப்பதாமே காப்பதாமே – எங்கள்

காளித் தாய்க்கொரு காப்பதாமே.

மாரியம்மன் கதைபடிக்க – எங்கள்

மைந்தன் காத்தான் காப்பதாமே.

காப்பதாமே காப்பதாமே – எங்கள்

காத்தானுக்கும் சின்னானுக்கும்.

காப்பதாமே காப்பதாமே – எங்கள்

மாரியரே காப்பதாமே.

 

===============================


காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - தொடர் – 02

சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி)

முத்துமாரியம்மன் வரவுப் பாடல்

 

அக்காளும் அம்மன் தங்காளுமாம் – அவா

ஆயிழைமார் அம்மனுக்கு ஏழு பேராம்.

 

ஏழு பேர்க்கும் அம்மன் நேரிழையாள் – அவா

இடும்பி என்னும் நல்ல மாரியல்லோ.

 

கொள்ளிக் கன்னி நல்ல மாரியல்லோ – அவா

குடிகளுக்கோ னல்ல வீரசக்தி.

ஆங்காரம் கொண்ட மாரியல்லோ – அவா

அகோரம் உள்ள நல்ல வீரசக்தி.

 

தேசாதி அம்மன் தேசமெல்லாம் – தாயார்

திருநடனம் அம்மன் செய்ய வந்தாள்.

 

திருநடனம் மாரி செய்யவென்று – இந்த

தேவியாரும் மாரி ஓடிவந்தாள்.

 

சந்தனப் பலகையிலே முத்துமாரியம்மன் – அவா

சாய்ந்து விளையாடி வாறாள் மாரிதேவி அம்மன்.

 

குங்குமப் பலகையிலே முத்துமாரியம்மன் – அவா

கூத்தாடி வாறாவாம் மாரிதேவி அம்மன்.

 

பத்திரிக்கை தானெடுத்தோ முத்துமாரி அம்மன் – தாயார்

பவனி வலம் வாறாவாம் மாரிதேவி அம்மன்.

 

வேப்பிலையைக் கைப்பிடித்தோ முத்துமாரி அம்மன் – தாயார்

வீதி வலம் வாறாவாம் மாரி தேவி அம்மன்.

 

தன்னுடைய மாளிகைக்கோ முத்துமாரி அம்மன் – இப்போ

தானோடி வீற்றிருந்தாள் மாரிதேவி அம்மன்.

 

பொது வசனம் :


முத்துமாரி அம்மன் தனது மாளிகையில் வீற்றிருக்க அவரது தமக்கையாராகிய பூமாதேவி அம்மன் பூமி பாரம் தாங்கமுடியாது தங்காளிடம் முறையிடப் போகிறாள்.

 

பூமாதேவி அம்மன் வரவுப் பாடல்


பூமாதேவி பாடல் :​

பூமியைத் துளைத்தெல்லவோ பூமாதேவி அம்மன் – அவா

பூவாய் மலர்ந்தாவாம் பூமாதேவி அம்மன்.

 

தண்டை கலகல என்ன பூமாதேவி அம்மன் – தன்னுடைய

தாமரைக்கால் தானசைய பூமாதேவி அம்மன்.

 

முத்தோ மொலு மொலென்ன பூமாதேவி அம்மன் – தன்னுடைய

மோதிரக்கால் தானசைய பூமாதேவி அம்மன்.

 

பூமிபாரம் தாங்காமலே பூமாதேவி அம்மன் – இப்போ

போறாவாம் தங்கையிடம் பூமாதேவி அம்மன்.

 

தங்காள் அரண்மனையில் பூமாதேவி அம்மன் – அவா

தானோடி வந்து நின்றாள் பூமாதேவி அம்மன்.

 

முத்துமாரி வசனம் :

அக்கள் வாருங்கள் இவ் ஆசனத்தில் அமருங்கள். தாங்கள் இங்கே வந்ததன் நோக்கம் அறியலாமா ?

 

பூமாதேவி வசனம் :

தங்காள் நீயோ செல்வச் செருக்கினால்விளையாடித் திரிகிறாய். நானோ பூமிபாரம் தாங்காது அவஸ்தைப் படுகிறேன்.

 

முத்துமாரி வசனம் :

அதுக்கு நான் என்ன செய்யவேண்டும் அக்காள் ?

 

பூமாதேவி வசனம் :

தங்காள் நீ பிறப்பு ஆயிரத்தொன்றும், இறப்பு ஆயிரமும் ஆக்கி வைப்பது உன் கடமை நான் சென்று வருகிறேன்.

 

முத்துமாரி வசனம் :

அப்படியே செய்கிறேன் அக்காள். நீங்கள் சென்று வாருங்கள்.

 

பூமாதேவி பாடல் :

தன்னுடைய மாளிகைக்கோ பூமாதேவி அம்மன் – அவா

தானோடிப் போறாவாம் பூமாதேவி அம்மன்.

=====================

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து  தொடர் – 03

சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி)


முத்துமாரியம்மன் வசனம் :

அக்காள் சொன்ன முறைப்படி பிறப்பு ஆயிரமும் இறப்பு ஆயிரத்தொன்றும் சரிவர நடாத்திவைக்க வேண்டுமெனில், நான் அந்த வைகைக் கரையோரம் சென்று தவமிருக்க வேண்டும். இதோ வைகைக்கரை செல்கிறேன்.

முத்துமாரியம்மன் பாடல் :

வைகைக்கரை தேடியெல்லோ முத்துமாரியம்மன்

தாயார் வடிவழகி போறாவாம் மாரி தேவியம்மன்


முத்துமாரியம்மன் வசனம் :

வைகைக்கரை வந்துவிட்டேன், கங்கையிலே நீராட வேண்டும்,

 

முத்துமாரியம்மன் நீராடுதல்

முத்துமாரியம்மன் பாடல் :


மூன்று குளம் தான் முழுகி - முத்துமாரியம்மன்

முக்கண்ணனை தோத்தரித்தாள்.

 

நான்கு குளம் தான் முழுகி – முத்துமாரியம்மன்

நாயகனை தோத்தரித்தாள்.

 

ஐந்து குளம் தான் முழுகி – முத்துமாரியம்மன்

அரணாரை தோத்தரித்தாள்.

 

அரகரா என்று சொல்லி – முத்துமாரியம்மன்

அணிந்து கொண்டாள் உருத்திராட்சம்.

 

சிவ சிவ என்றுசொல்லி – முத்துமாரியம்மன்

திருநீற்றால் காப்புமிட்டேன்.

 

ஆற்று மணலெடுத்தோ – முத்துமாரியம்மன்

அரணாரை உண்டு பண்ணி.

 

சேற்று மணலெடுத்தோ – முத்துமாரியம்மன்

சிவனாரை உண்டு பண்ணி.

 

முத்துமாரியம்மன் வசனம் :

நீராடி விட்டேன் இனி அத்தாரை நினைத்து தவமிருக்க வாண்டும்.

 

முத்துமாரியம்மன் பாடல் :


இருந்தாள் அருந்தபசோ – முத்துமாரியம்மன்

ஏழிலங்கை சோதிமின்ன.

 

வடக்கே சரிந்த சடை – முத்துமாரியம்மன்

வடகடலோ வேர் பரவ.

 

தெற்கே விழுந்த சடை – முத்துமாரியம்மன்

தென்கடலைத் தொட்டிடுமாம்.

 

கிழக்கே சரிந்த சடை – முத்துமாரியம்மன்

கீழ்கடலோ வேர்பரவ.

 

மேற்கே விழுந்த சடை – முத்துமாரியம்மன்

மேல்கடலைத் தொட்டிடுமாம்.

 

அவா தவத்தால் பெரியவளாம் – முத்துமாரியம்மன்

சாத்திரத்தில் வல்லவளாம்.

 

அம்மன் இனத்தால் பெரியவளாம் – முத்துமாரியம்மன்

ஈஸ்வரனார் வம்மிசமாம்.

 

உண்டென்பார் வாசலிலே – முத்துமாரியம்மன்

ஒளிவிளக்காய் நின்றெரிவாள்.

 

இல்லையென்றார் வாசலிலே – முத்துமாரியம்மன்

இடுவேன் காண் சாபமொன்று.

 

சிவனாரைத் தான் நினைத்து – முத்துமாரியம்மன்

சிவதபசோ செய்யலுற்றாள்.

 

அரணாரை தான் நினைத்தோ – முத்துமாரியம்மன்

அருந்தபசோ தானிருந்தாள்.

 

நாகம் குடை பிடிக்க – முத்துமாரியம்மன்

நல்ல நாகம் தாலாட்டென்றாள்.

 

இருந்தாள் அருந்தபசோ – முத்துமாரியம்மன்

ஏழிலங்கை சோதிமின்ன.

 

சிவன் வரவு

சிவன் பாடல் :

காவி உடுத்தெல்லவோ ஆதிசிவனாரும் – ஓரு

காரணமாய் வேசங் கொண்டார் மாய சிவனாரும்.

 

நானும் புலித்தோல் உடுத்தெல்லவோ – ஆதி சிவனாரும்

நல்ல பூரணமாய் வேசங்கொண்டேன் மாய சிவனாரும்.

 

இலங்கும் இலங்கும் என்றோ – ஆதிசிவன் நானும்

எட்டி அடி வைத்தும் வாறேன் மாயசிவன் நானும்.

 

துலங்கும் துலங்கும் என்றோ – ஆதிசிவன் நானும்

தூக்கி அடி வைத்தும் வாறேன் மாயசிவன் நானும்.

 

வேலாயுதம் தானெடுத்தோ – ஆதிசிவன் நானும்

விசிக்கிக் கொண்டு வாறேனெல்லோ மாயசிவன் நானும்.

 

சூலாயுதம் தானெடுத்தோ – ஆதிசிவன் நானும்

சுழட்டிக் கொண்டு வாறேனெல்லோ மாயசிவன் நானும்.

=============================

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து  தொடர் – 04

சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி)


சிவன் வசனம்: 

                            நல்லது அந்த ஆங்காரமாரி என்னை நினைத்து

                           அகோர தவம் செய்கின்றாள். அவளது தவத்தை

                           எப்படியாவது கலைக்க வேண்டும். அப்படிக்

                           கலைப்பதாய் இருந்தால் எனது வெற்றி எனப்படும்

                           வேலாயுதத்தையும், சக்தி எனப்படும் சூலாயுதத்தையும்

                           விட்டெறிய வேண்டும் இதோ......

சிவன் பாடல்:

நானும் வேலாயுதம் தானெடுத்தோ ஆதிசிவன் நானும் - இப்போ

விசிக்கி விட்டேன் தபசழிக்க மாயசிவன் நானும்.


நானும் சூலாயுதம் தானெடுத்தோ ஆதிசிவன் நானும் - இப்போ

சுழட்டி விட்டேன் தபசழிக்க மாயசிவன் நானும்.


மண்ணதிர விண்ணதிர வேலாயுதம் தானும் - அது

மலையதிரப் போய் வருமாம் சூலாயுதம் தானும்.

​சிவன் வசனம்: ​

என்ன ஆச்சரியம்! எனது வெற்றி எனப்படும் வேலாயுதமும்,

சக்தி எனப்படும் சூலாயுதமும் இன்னமும் திரும்பி வரக்காணோம்.

இது என்னவோ மாரியின் சூழ்ச்சியாகத்தான்

இருக்க வேண்டும். நான் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டும்.

அப்படிச் செல்வதாய் இருந்தால் நான் இந்த வடிவத்தோடு

செல்லக்கூடாது. ஓர் வயோதிப வடிவம் எடுத்துத்தான்

செல்ல வேண்டும். இதோ அப்படியே செல்கிறேன்.

சிவன் பாடல்:

​நானும் என்ன வடிவெடுத்தேன் ஆதிசிவன் - நானும்

எண்ணமற்ற சிந்தையிலே.


நானும் தொண்ணூறும் பத்தும் சென்ற ஆதிசிவன் - நானும்

துவண்ட கிழவனைப் போல்.


நானும் நானூறும் பத்தும் சென்ற ஆதிசிவன் - நானும்

நரைத்த கிழவனைப் போல்.

தள்ளாடித் தள்ளாடித்தான் ஆதிசிவன் - இப்போ

தடிபிடித்தோ தான் நடந்தார்.


மாரி தவத்தடிக்கோ ஆதிசிவன் - நானும்

மளமளென்று வந்து நின்றேன்.

முத்துமாரி வசனம்:

எனது தவத்தடியில் யாராலும் வரமுடியாது.

ஞானத்தால் பார்க்கின்றபோது, வயோதிப வடிவில்

அத்தார் தான் வந்திருக்கிறார் போல் தெரிகிறது.

தவத்தை விட்டிறங்கி அத்தாரை வரவேற்று,

அவருக்குப் பாதபூசை செய்து நமஸ்கரித்து,

வேண்டிய வரங்களைப் பெறவேண்டும்.


அத்தாரே வாருங்கள் இவ் ஆசனத்தில் அமருங்கள்.

சிவன் வசனம்:

அப்படியே ஆகட்டும் மாரி.

முத்துமாரி வசனம்:

அத்தாரிற்கு பூசை செய்வதற்கு வேண்டிய புஷ்பங்களை

எடுப்பதற்கு நந்தவனம் செல்லவேண்டும் இதோ செல்கிறேன்.

முத்துமாரி பாடல்:

பூங்காவைத் தேடியெல்லோ முத்துமாரியம்மன் - தாயார்

போதரவாய் போகலரற்றாள் மாரிதேவியம்மன்.

முத்துமாரி வசனம்:

பூங்காவிற்கு வந்துவிட்டேன். இனி புஷ்பங்கள் எடுக்கவேண்டும்.

முத்துமாரி பாடல்:

தோட்டம் திறந்தெல்லவோ முத்துமாரியம்மன்

தொன்னை தைத்துப் பூவெடுத்தாள்.


கையாலே பூவெடுத்தால் முத்துமாரியம்மன்

காம்பழுகிப் போகுமென்று


மதியாலே பூவெடுத்தால் முத்துமாரியம்மன்

மலர்வாடிப் போகுமென்று


வெள்ளியினால் ஒரு கொக்கை கட்டி முத்துமாரியம்மன்

விதம் விதமாய் போவெடுத்தாள்.


தங்கத்தினால் நல்ல கொக்கை கட்டி முத்துமாரியம்மன்

தகுந்த மலர் தானெடுத்தாள்.


அத்தலரி நல்ல கொத்தலரி முத்துமாரியம்மன்

அடுக்கலரிப் பூவெடுத்தாள்.


​சீதூளாய் செவ்வரத்தி முத்துமாரியம்மன்

செண்பகப்பூ தானெடுத்தாள்.

முத்துமாரி வசனம்:

புஷ்பங்கள் எடுத்துவிட்டேன். இனித் தீர்த்தம் 

எடுக்க வேண்டும்.

முத்துமாரி பாடல்:

ஓடுகிற கங்கையிலே முத்துமாரியம்மன்

ஒரு செம்பு நீரெடுத்தாள்.


பாய்ந்து வந்த கெங்கையிலே முத்துமாரியம்மன்

பக்குவமாய் நீர் எடுத்தாள்.

முத்துமாரி வசனம்:

புஷ்பமும், தீர்த்தமும் எடுத்துவிட்டேன் - இனி

அத்தாரிடம் செல்ல வேண்டும்.

முத்துமாரி பாடல்:

நானும் அத்தாரத் தேடியெல்லோ முத்துமாரியம்மன் - இப்போ

அன்புடனே போகலுற்றாள் மாரிதேவி அம்மன்.


சிவனாரத் தேடியெல்லோ முத்துமாரியம்மன் - தாயார்

சீக்கிரமாய் போறாவாம் மாரிதேவி அம்மன்.

முத்துமாரி வசனம்:

சரி இனி அத்தாருக்குப் பன்னீரால் கால் கழுவி,

பட்டினால் ஈரம் துவட்டி, கொண்டுவந்த

பூக்களைச் சொரிந்து வேண்டிய வரங்களைப்

பெறவேண்டும். 


===============================

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் - 05

மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்


​​முத்துமாரியம்மன் பாடல்: 

நானும் பாதங் கழுவியெல்லோ முத்துமாரியம்மன்

பட்டுக் கொண்டு ஈரம் தான் துடைத்தாள்.


நானும் கொண்டு வந்த பூமலரை முத்துமாரியம்மன்

குபுகுபென நான் சொரிந்தேன்.


எடுத்துவந்த பூமலரை முத்துமாரியம்மன்

ஈஸ்வரர்க்கே நான் சொரிந்தேன்.


நானும் ஆய்ந்து வந்த பூமலரை முத்துமாரியம்மன்

அத்தாரிற்கே நான் சொரிந்தேன்.


பறித்து வந்த பூமலரை முத்துமாரியம்மன்

பக்குவமாய் நான் சொரிந்தேன். 

முத்துமாரியம்மன் வசனம்:

சரி புஷ்பங்கள் எல்லாம் சொரிந்து விட்டேன்

இனி அத்தாரை நமஸ்காரம் செய்யவேண்டும்.

முத்துமாரியம்மன் பாடல்:

நானும் முக்கால் வலமாய் வந்தோ முத்துமாரியம்மன்

அத்தாரை முடி வணங்கி தெண்டனிட்டா மாரிதேவியம்மன்.


நாற்கால் வலமாய் வந்தோ முத்துமாரியம்மன்

அத்தாரை நமஸ்கரித்துத் தெண்டனிட்டா மாரிதேவியம்மன்.


ஐக்கால் வலமாய் வந்தோ முத்துமாரியம்மன்

அத்தாரை அடிவணங்கி தெண்டனிட்டாள் மாரிதேவியம்மன்.


சரணம் சரணம் என்றோ முத்துமாரியம்மன் - அவா

திருவடியை சரணமிட்டாள் மாரிதேவியம்மன்.


பிடிக்கின்றேன் பாதம் என்றோ - முத்துமாரியம்மன்

அத்தாரின் பொற்பாதம் பிடித்து விட்டாள் மாரிதேவியம்மன்.

சிவன் வசனம்:

பெண்ணே எழுந்திருப்பாய்.

சிவன் பாடல்:

என்றும் இல்லா பெண்ணே பூசையடி

நீயும் எனக்கறிய மாரி சொல்லேனடி.

முத்துமாரியம்மன் பாடல்:

நந்தவனம் அத்தாரே சென்றதனால் - நானும்

நறுமலர்கள் கொய்து வந்து தான் சொரிந்தேன்.

சிவன் பாடல்:

எடி பல நாளும் மாரிநான் பார்த்தறியா

இந்தப் பாதபூசை பெண்ணே ஏதுக்கடி.

முத்துமாரியம்மன் பாடல்:

அத்தாரே கண்டசுர மாலை வாங்குதற்கு

இந்தக் காரிகையாள் பூசை செய்தேன் அத்தார்.

சிவன் வசனம்:

பெண்ணே எதற்காக இவ்வளாவு நமஸ்காரம்?

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தாரே தங்கள் கழுத்தில் இருக்கும் கண்டசுர

மாலையை வாங்குவதற்காகவே இவ்வளவு நமஸ்காரம்.

சிவன் வசனம்:

ஓகோ அப்படியா சங்கதி சரி நான் எனது

மாலையை தருவதாக இருந்தால், நீ உனது

திருநெற்றியில் இருக்கும் நெற்றிக் கண்ணை எடுத்து

எனது நெற்றியில் வைப்பாயாய் இருந்தால்,

நான் எனது கண்டசுர மாலையை தருவேன். 

முத்துமாரியம்மன் வசனம்:

ஆண்புலி அஞ்சிப்பாயும், பெண்புலி ஊடுருவிப்பாயும்

எல்லாம் பின்னாடி பார்ப்போம். எனது கண்ணை எடுத்து

தங்கள் திருநெற்றியில் வைத்தேன். 

சிவன் வசனம்:

பெண்ணே இப்போ எப்படி இருக்கிறது?

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தார் முக்கண்ணனாக காட்சியளிக்கின்றார்.

சிவன் வசனம்:

நல்லது பெண்ணே நான் சென்று வருகின்றேன்.

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தாரே நல்ல காரியம் செய்து விட்டீர்கள் மாலையைத் தரவேண்டும்.

சிவன் வசனம்:

மாலையைப் பெறுவதில் அவ்வளவு குறியாக இருக்கிறாய்.

சரி இதோ மாலையைப் பெற்றுக்கொள் நான் வருகிறேன்.

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தாரே மாலையைக் கொடுத்தால் மட்டும் போதுமா?

மாலையின் மகத்துவத்தையும் சற்றுக் கூறுங்கள் பார்ப்போம்.

சிவன் வசனம்:

பெண்ணே மாலையின் மகத்துவத்தை தெரிவிப்பதாக இருந்தால்

பொழுது விடியும், பொற்கோழி கூவும், நிலவு விடியும், நீல வண்டு கத்தும் பெண்ணே. 

முத்துமாரியம்மன் வசனம்:

காரியமில்லை தெரிவியுங்கள் அத்தாரே.

சிவன் பாடல்:

எண்சாண் உடம்பதெல்லாம் பெண்ணே நீ கேளாய்

இரு பிளவாய் கட்டிவைக்கும் மாரி நீ பாராய்.


காய்ச்சல் உடன் தடிமன் பெண்ணே நீ கேளாய்

இதில் காலுளைவு நாரிக்குத்து மாரி நீ பாராய்.


ஈமை இருமலடி பெண்ணே நீ கேளாய் - இதில்

இடுப்புவலி மண்டைக்குத்து மாரி நீ பாராய்.


வரகரிசிச் சாயலைப் போல் பெண்ணே நீ கேளாய்

இங்கே வருமடியே தொப்பளங்கள் மாரி நீ பாராய்.


திணை அரிசிச் சாயலைப் போல் பெண்ணே நீ கேளாய்

இங்கே சிந்துமடி சின்னமுத்து மாரி நீ பாராய்.


பன்னீர்க் குடமது போல் பெண்ணே நீ கேளாய்

இங்கே படருமடி தொப்பளங்கள் மாரி நீ பாராய்.


இப்பேற்பட்ட நோய்கள் எல்லாம் பெண்ணே நீ கேளாய்

இங்கே இருக்குதடி மாலையிலே மாரி நீ பாராய். 

சிவன் வசனம்:

மாரி இதுதான் மாலையின் மகத்துவம். நான் சென்று வருகிறேன்.

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தாரே! நல்லது. சரி சவர்த்தரையில் ஒரு முத்தை

விதைத்தால் எப்படியிருக்கும்?

சிவன் வசனம்:

சாவி சப்பட்டையாய்ப் போய்விடும்.

முத்துமாரியம்மன் வசனம்:

நல்ல தரையில் ஒரு முத்தைப் போட்டால்

எப்படியிருக்கும் அத்தாரே?

சிவன் வசனம்:

நல்ல படியாக முளைத்து வரும் பெண்ணே. 

முத்துமாரியம்மன் வசனம்:

வழியில் போறவனுக்கு ஒரு முத்தைப் போட்டால்

எப்படியிருக்கும் அத்தாரே?

சிவன் வசனம்:

போர்த்து முக்காடிட்டு மூலையில் போய் இருப்பான்.

முத்துமாரியம்மன் வசனம்:

வழியில் போகிறவனுக்குப் போடுவதை விட

அத்தாரிற்கே இம்முத்துக்களை போட்டுப்

பார்த்தால் எப்படியிருக்கும்?

சிவன் வசனம்:

அடியே! சண்டாளி! நன்மை செய்தவனுக்கே தீமை

செய்யப்பார்க்கிறாயா? என்னிடம் இருந்த கண்டசுர 

மாலையை வாங்கியதும் அல்லாமல் அதில் உள்ள

நோய்களையும் எனக்கே போடப் பார்க்கிறாயா?

சரி போடு பார்க்கலாம்.

முத்துமாரியம்மன் பாடல்:

நானும் மொட்டாக்கைத் தான் திறந்தோ முத்துமாரியம்மன்

இப்போ மூன்று முத்தைத் தானெறிந்தாள் மாரிதேவியம்மன்.


நானும் ஆக்கைத் திறந்தல்லவோ முத்துமாரியம்மன்

இப்போ ஐந்து முத்தைத் தானெறிந்தா மாய சிவனார்க்கு.


பயணம் பயணம் என்றோ முத்துமாரியம்மன்

தாயார் பயணபுரம் போகலுற்றாள் மாரிதேவியம்மன்.

========================


காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 6

சண்முகநாதன் கஜேந்திரன்

 

சிவன் வசனம் :

ஐயோ சண்டாளி என்னிடம் மாலையை வாங்கியது மட்டுமன்றி அதிலிருந்த நோய்களையும் எனக்கே போட்டுவிட்டள்.

சிவன் பாடல்:

அந்த மாரியொரு மாரி பெண்பிறந்து, பெண்பிறந்து

இந்த மானிலத்தோர் குடி கெட்டதெடி.

 

தேவியொரு தேவி பெண்பிறந்து, பெண்பிறந்து

இந்த தேசத்தோர் குடி கெட்டதெடி.

 

ஆங்கார மாரி போட்டமுத்து, போட்டமுத்து

எனக்கு அனலாய் எரியுதெடி.

 

நெட்டூரமாரி போட்டமுத்து, போட்டமுத்து

என்னால் நிண்டு கொள்ளக் கூடுதில்லை.

 

அனலோடி மாரி உன்சொரூபம் பாதகத்தி

என்னால் அண்டலிக்கக் கூடுதில்லை.

 

நெருப்போடி மாரி உன்சொரூபம் பாதகத்தி

என்னால் நிண்டு கொள்ளக் கூடுதில்லை.

சிவன் வசனம்:

நான் இப்படித் தனிமையில் இருந்து புலம்புவதில் அதுவித பயனுமில்லை. எனது மனைவியாகிய பார்வதியையாவது அழைத்துப் பார்ப்போம்.

சிவன் பாடல்:

தாலி பறி போகுதடி பார்வதியே பெண்ணே

உந்தன் தலைவன் இங்கே மாளுகிறான் பத்தினியே பெண்ணே.

 

கூறை பறி போகுதடி பார்வதியே பெண்ணே

உந்தன் கொழுந்தனிங்கே மாளுகிறான் பத்தினியே பெண்ணே.

 

அபயம் அபயமடி பார்வதியே பெண்ணே

நீயும் அதி சுறுக்காய் வாவெனடி உத்தமியே கண்ணே.

 

காலால் நடவாமலே பார்வதியே பெண்ணே – நீயும்

காற்றாய்ப் பறந்து வாவேன் உத்தமியே கண்ணே.

பார்வதி அம்மன் வரவு

 

பார்வதி அம்மன் பாடல்:

அபயக்குரல் கேட்டல்லவோ பார்வதி அம்மன்

அவா அதி சுறுக்காய் வாறாவாம் பார்வதி அம்மன்.

 

காலால் நடவாமலே பார்வதி அம்மன்

அவா காற்றாய்ப் பறந்து வாறா பார்வதி அம்மன்.

 

ஓட்டம் நடையுடனே பார்வதி அம்மன்

ஒரு நொடியில் போறாவாம் பார்வதி அம்மன்.

 

நாதன் அரண்மனைக்கோ பார்வதி அம்மன்

நடந்தோடி வந்து நின்றா பார்வதி அம்மன்.

 

பார்வதி வசனம் :

நாதா நமஸ்கரிக்கின்றேன். தங்களிற்கு என்ன நடந்தது ? என்னை அவசரமாய் அழைத்ததன் நோக்கம்….

சிவன் வசனம்:

பெண்ணே தெரிவிக்கின்றேன். இவ் ஆசனத்தில் அமர்வாயாக. உனது தங்கையாகிய ஆங்காரமாரி என்னிடம் இருந்த கண்டசுர மாலையை வாங்கியது மட்டுமன்றி, அதிலுள்ள நோய்களையும் எனக்கே போட்டுவிட்டாள் பாவி.

சிவன் பாடல்:

எடி பூவிழப்பாய் பொட்டிழப்பாய் பார்வதியே பெண்ணே

உந்தன் புருஷனையோ நீ இழப்பாய் உத்தமியே கண்ணே.

 

எடி கூறை இழந்த கதை பார்வதியே பெண்ணே

உன்னைக் கூப்பிட்டல்லோ கேட்கப்போறார் ஊரவர்கள் தானும்.

 

எடி தாலி இழந்த கதை பார்வதியே பெண்ணே

உன்னைத் தனித்து வைத்து கேட்கப்போறார் ஊரவர்கள் தானும்.

 

எல்லாம் இழந்தாயடி பார்வதியே பெண்ணே – நீயும்

என்னையுமோ விட்டிழந்தாய் உத்தமியே கண்ணே.

 

தாங்க முடியவில்லை பார்வதியே பெண்ணே – என்னைத்

தாங்கிப் பிடியேனடி உத்தமியே கண்ணே.

பார்வதி வசனம்:

நாதா இதற்கு நான் என்ன செய்யவேண்டும்?

சிவன் வசனம்:

உனது தங்கை ஆங்காரமாரியிடம் சென்று நீ போட்ட முத்தின் வேதனை தாங்காது புலம்புகிறார் என்று சொல்லி, நீ போட்ட நோயை எடுக்கும்படி தெரிவித்து வா பெண்ணே.

பார்வதி வசனம்:

சரி நான் நான் சென்று வருகிறேன்.

பார்வதி பாடல்:

நானும் தங்காள் அரண்மனைக்கோ பார்வதியம்மன் – இப்போ

தானோடி வந்து நின்றா பார்வதியம்மன்.

முத்துமாரியம்மன் வசனம்:

அக்காள் வாருங்கள் இவ்வாசனத்தில் அமருங்கள். எதற்காக வந்தீர்கள்?​

பார்வதி வசனம்:

அடியே தங்காள் எனக்கு நாதன் உனக்கு அத்தார் அந்த ஆதி பரமேஸ்வரனுக்கு என்னவேலை செய்தாய்

முத்துமாரியம்மன் வசனம்: 

என்ன வேலை செய்தேன் அக்கா.

பார்வதி வசனம்:

அவர் கழுத்திலிருக்கும் கண்டசுர மாலையை வாங்கியதி மட்டுமன்றி, அதில் உள்ள நோய்களையும் அவருக்கா போட்டுவிட்டாய். அவர் நோயின் வேதனை தாங்காது புலம்புகிறார். உடனடியாக அந்நோயை எடுத்து வருவாயாக.

முத்துமாரியம்மன் வசனம்:

நான் அத்தார் மேல் போட்ட முத்தை எடுப்பதாய் இருந்தால் எனக்கு ஆகவேண்டிய பொங்கல், பூசை செய்து தரவேண்டும்.

பார்வதி வசனம்:

இவ்விடம் இருந்துகொள் பொங்கல், பூசை செய்து தருகின்றேன்.

பார்வதி பாடல்:

பொற்சருவம் தானெடுத்தோ பார்வதி அம்மன் – அவா

பொங்கல் உலை வாத்து வைத்தா பார்வதி அம்மன்.

 

பயற் கலந்தரிசி பார்வதி அம்மன் – அவா

பக்குவமாய் உலையிலிட்டாள் பார்வதி அம்மன்.

 

ஈர்க்குப் போல் சம்பா தேடி பார்வதி அம்மன் – அவா

இன்பமுடன் பொங்கல் செய்தா தங்கையர்க்குத் தானும்.

 

பத்துமுடாப் பொங்கல் செய்தோ பார்வதி அம்மன் – அவா

பக்குவமாய் தான் படைத்தா தங்கையர்க்குத் தானும்.

பார்வதி வசனம்:

பொங்கல் செய்து படைத்துவிட்டேன் இனிமேல் பூமடை படைக்கவேண்டும்.

பார்வதி பாடல் :

கட்டோடு வெத்திலையாம் பார்வதி அம்மன் – அங்கே

கமுகோடிளம் பாக்காம் மாரிதேவிக்காக.

 

கொப்போடு மாங்காய்களாம் பார்வதி அம்மன் – அவா

குலையோடு செவ்விளனீர் தங்கையர்க்குத் தானும்.

 

வேரில் வெடித்ததொரு பார்வதி அம்மன் – அங்கே

வெடியன் பலாப்பழமாம் தங்கையர்க்குத் தானும்.

 

ஈணாத வாழையிலே பார்வதி அம்மன் – அவா

இடைக்கதலித் தேன் பழமாம் மாரிதேவிக்காக.

 

கற்பூர தீபங்களாம் பார்வதி அம்மன் – நல்ல

சாம்பிராணி வாசனையாம் மாரிதேவிக்காக.

 

பொங்கல் பூசைதான் முடித்து பார்வதி அம்மன் – அவா

தங்கையரைத்தான் நினைத்தாள் பார்வதி அம்மன்.

பார்வதி வசனம்:

தங்காள் உனக்கு ஆகவேண்டிய பொங்கல், பூசை செய்துவிட்டேன். பொங்கல் பூசையை ஏற்றுக்கொண்டு, அத்தார் மேல் போட்ட முத்தையும் எடுத்துக் கொண்டு பூலோகத்தின் கண் சென்று விளையாடி வாடி தங்காள்.

முத்துமாரியம்மன் வசனம்:

அக்காள் ! இந்தப் பொங்கல் பூசை எனக்குத் தொட்டுத் திலகமிடக் கூடக் காணாது. எனக்கு அரபலியும், நரபலியும் தரவேண்டும்.

பார்வதி வசனம்:

தங்காள் என்னிடம் ஆடு, மாடு, கோழி இல்லை. ஆனபடியால் நீ நாலு திசையிலும் சுற்றிப்பார்த்து உனக்கு ஆகவேண்டிய அரபலியும், நரபலியும் எடுத்துக் கொண்டு, அத்தார் மேலிட்ட நோயை எடுத்துக்கொண்டு பூலோகம் சென்று விளையாடிவா கண்ணே.

முத்துமாரியம்மன் வசனம்:

சரி அப்படியே ஆகட்டும். நீங்கள் சென்றுவாருங்கள் அக்கா.

பார்வதி பாடல்:

தன்னுடைய மாளிகைக்கோ – பார்வதியம்மன்

தானோடிப் போறாவாம் பார்வதியம்மன்.


====================


காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 7

சண்முகநாதன் கஜேந்திரன்



முத்துமாரியம்மன் பாடல்:

இந்திரனார் வாசலிலே முத்துமாரியம்மன் - ஒரு

சிறிய அன்னம் காவு கொண்டாள் மாரிதேவியம்மன்.


பரமசிவன் வாசலிலே முத்துமாரியம்மன் - ஒரு

ஒரு பாற்பசுவும் காவு கொண்டாள் மாரிதேவியம்மன்.


யம தர்மன் வாசலிலே முத்துமாரியம்மன் - ஒரு

வெள்ளை அன்னம் காவு கொண்டாள் மாரிதேவியம்மன்.


நாலு தெரு நாலு சந்தி முத்துமாரியம்மன் - ஒரு

நரபலியும் காவு கொண்டாள் மாரிதேவியம்மன்.


அத்தாரை தேடியெல்லோ முத்துமாரியம்மன்

அது சுறுக்காய் போகலுற்றாள் மாரிதேவியம்மன்.


சிவனாரை தேடியெல்லோ முத்துமாரியம்மன்

சீக்கிரமாய் போகலுற்றாள் மாரிதேவியம்மன்.


அத்தார் மேல் போட்ட முத்தை - முத்துமாரியம்மன்

அன்புடனே தானெடுத்தாள் மாரிதேவியம்மன்.


சிவனார் மேல் போட்ட முத்தை - முத்துமாரியம்மன்

சீக்கிரமே தானெடுத்தாள் மாரிதேவியம்மன்.


முத்தெடுத்த கையுடனே முத்துமாரியம்மன்

விட்டெறிந்தாள் பட்டணத்தை மாரிதேவியம்மன்.


பயணம் பயணம் என்றோ முத்துமாரியம்மன் - அவா

வைசூரன் பட்டணம் போகலுற்றாள் மாரிதேவியம்மன்.

வைசூரராசன் வரவு

வைசூரராசன் பாடல்:

தங்கப்பல்லக்கில் ஏறியல்லோ வைசூரராசன் - அவர்

தானோடி வாறாராம் வைசூரராசன்.


முத்துப்பல்லக்கில் ஏறியல்லோ வைசூரராசன் - இப்போ

மொலு மொலென்ன வாறாராம் வைசூரராசன்.


மல்லர்கள் முன் நிற்க வைசூரராசன் - இப்போ

மன்னனும் நான் ஓடிவாறேன் வைசூரராசன்.


ஆனை படை சூடி எல்லோ வைசூரராசன் - இப்போ

அரசனும் நான் ஓடிவாறேன் வைசூரராசன்.


செங்கோல் ஒன்று கைப்பிடித்து வைசூரராசன் - இப்போ

சீக்கிரமாய் வந்து நின்றேன் வைசூரராசன்.


சிம்மாசனம் தேடியெல்லோ வைசூரராசன் - இப்போ

சீக்கிரமாய் வந்தமர்ந்தேன் வைசூரராசன்.

மல்லர்கள் வசனம்:

மகாராசா நமஸ்கரிக்கின்றோம்.

வைசூரராசன் வசனம்:

சர்வ தயாபர சிவபிரான் திருவருளால் அரிதாகிய மானிடப் பிறப்பில் விக்கினமின்றி அவதரித்து, பிதா மாதாக்கள் பெயர் விளங்க, இச் சிம்மாசனத்தில் இருந்து செங்கோல் செலுத்தி வருகின்றேன். குடிமக்களின் சேமலாபங்களை விசாரிக்க வேண்டும்..... அமைச்சரே!

மந்திரி வசனம்:

அரசே!

வைசூரராசன் வசனம்:

நமது நாட்டின் விசாரணைகளை விசாரிக்க ஆவல் கொண்டுள்ளேன். பதி அளிக்க சித்தமாய் இருக்கின்றீர்களா?

மந்திரி வசனம்:

எவ்விதமான கேள்விகளைக் கேட்டாலும் தகுந்த பதில் அளிக்கச் சித்தமாய் இருக்கிறேன் அரசே!

வைசூரராசன் வசனம்:

அடே மல்லர்காள் நான் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கச் சித்தமாக இருக்கிறீர்களா?

மல்லர்கள் வசனம்:

ஆம் மகாராசா!

வைசூரராசன் வசனம்:

அடே மல்லர்களே! தேவாலயம், பிரமாலயம், விஷ்ணு ஆலயம் இவ்வாலயங்களில் ஆறுகாலப் பூசை நெய்வேத்தியம் குறைவின்றி நடந்து வருகின்றதா?

மல்லர்கள் வசனம்:

குறைவின்றி நடந்து வருகின்றது மகாராசா.

வைசூரராசன் வசனம்:

சபாஷ் மெச்சினேன் மல்லர்காள், அன்ன சத்திரங்களில் என்றும் வரும் ஏழைகளுக்கு குறைவின்றி அன்னமளித்து வருகின்றார்களா?

மல்லர்கள் வசனம்:

குறைவின்றி அன்னமளித்து வருகின்றார்கள்.

வைசூரராசன் வசனம்:

மிகவும் சந்தோசம். அடே மல்லர்காள்! ஆசாரவாசலில் கவனமாகக் காவல் செய்யுங்கள்.

மல்லர்கள் வசனம்:

உத்தரவு மகாராசா.

முத்துமாரியம்மன் வசனம்:

இந்த முத்துக்களையெல்லாம் அளந்துகட்ட வேண்டும்

முத்துமாரியம்மன் பாடல்:

முக்காலி மேலிருந்தோ முத்துமாரியம்மன்

மூன்றுபடி முத்தளந்தா.


நாற்காலி மேலிருந்தோ முத்துமாரியம்மன்

நாலுபடி முத்தளந்தா.


முத்தளந்த கொத்தையெல்லாம் - அவா

விட்டெறிந்தா பட்டணமே.


முத்தளந்த கையுடனே முத்துமாரியம்மன்

முன்களத்தைப் பார்க்கலுற்றாள்.

முத்துமாரியம்மன் வசனம்:

முன்களத்தைப் பார்க்கும்போது மூன்று முத்து எஞ்சியிருக்கிறது. அதில் ஒரு முத்தை எடுத்து ஆகாயத்தில் எறிந்து விடுவோம். ஆகாயத்தில் எறிந்த முத்து நட்சத்திரங்களாக இருக்கின்றது. மற்ற முத்தை எடுத்துக் கடலிலே எறிந்து விடுவோம். கடலிலே எறிந்த முத்து முருகைக் கற்களாக மாறி இருக்கிறது. மற்ற முத்தை எடுத்து பூமியிலே எறிந்து விடுவோம். பூமியில் எறிந்த முத்து அறுகில் கிழங்குகளாகவும், கற்பாறையில் போறைகளாகவும் இருக்கின்றது. சரி நல்லது வைசூரராசன் என்பவன் தேவருக்கும் முனிவருக்கும் அஞ்சாது இராச்சியம் செய்து வருகின்றான். அவனை நான் ஒருமுறை பார்ப்பதாக இருந்தால் இவ் வடிவத்தோடு செல்லக்க் கூடாது. நான் ஒரு குஷ்டரோகக் கிழவி வடிவெடுத்துத்தான் செல்லவேண்டும். 


===============

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 8

சண்முகநாதன் கஜேந்திரன்

முத்துமாரியம்மன் பாடல்:

என்ன வடிவெடுத்தா முத்துமாரியம்மன் 

எண்ணமற்ற சிந்தையிலே.


தொண்ணூறும் பத்தும் சென்ற முத்துமாரியம்மன்

துவண்ட கிழவியைப் போல்.


நானூறும் பத்தும் சென்ற முத்துமாரியம்மன்

நரைத்த கிழவியைப் போல்.


தள்ளாடித் தள்ளாடித் தான் முத்துமாரியம்மன்

தடி பிடித்துத் தான் நடந்தா.


சண்டாளன் பட்டணத்தை முத்துமாரியம்மன்

தான் பார்க்க வேண்டுமென்று.


இராசாவின் மாளிகைக்கோ முத்துமாரியம்மன்

இராச கன்னி  வந்து நின்றாள். 

முத்துமாரியம்மன் வசனம்:

ஆரப்பா வீட்டுக்காரர்! ஆரப்பா வீட்டுக்காரர்!

வைசூரராசன் வசனம்:

அடே மல்லர்காள், ஆசார வாசலில் ஏதோ சத்தம் கேட்கிறது அறிந்து வாருங்கள்.

மல்லர்கள் வசனம்:

சரி அப்படியே.... மகாராசா ஒரு குஷ்டரோகக் கிழவி வந்து நிற்கின்றாள்.

வைசூரராசன் வசனம்:

என்ன குஷ்டரோகக் கிழவியா? அவளை இவ்விடம் அழைத்து வாருங்கள்.

மல்லர்கள் வசனம்:

உத்தரவு.... கிழவி இதோ வா. மகாராசா இதோ,

வைசூரராசன் வசனம்:

அடியே சண்டாளி.

வைசூரராசன் பாடல்:

யார் குடிகெடுக்க வந்தாய் சண்டாளத் துரோகி

நீயும் ஆண்டி வேடம் பூண்டு வந்தாய் அப்பாலே போ.


பாலர் குடி கெடுக்கச் சண்டாளத் துரோகி - நீயும்

பாவி இங்கு வந்தாயோடி அப்பாலே போ.. போ..


அம்மையுடன் கொப்பளிப்பான் சின்ன முத்துகள் - நீயும்

அணுகாத நோய்களெல்லாம் கொண்டு வந்தாய் செல்.

வைசூரராசன் வசனம்:

அடியே சண்டாளி காகம் பறவாது, கரிக்குருவி நாடாது, சிட்டுப் பறவாது, சிறு  அன்னம் நாடாது அப்பேற்பட்ட நோயில்லா ஊருக்கு நோய்களைக் கொண்டு வந்திருக்கின்றாய். அடியே உன்னைச் சும்மா விடுவேன் என்று எண்ணாதே. அடே மல்லர்காள் இவளை அடுத்த கானகத்தில் கொண்டுபோய் வாளால் வெட்டி இரத்தம் கொண்டுவந்து காட்டுங்கள். செல்லுங்கள் சீக்கிரம். 

மல்லர்கள் வசனம்:

அப்படியே மகாராசா....... கிழவி நட.

மல்லர்கள் பாடல்:

நடவும் நடவும் என்றோ மல்லர் இருபேரும் - இப்போ

முன்னும் பின்னும் இழுக்கலுற்றோம் மல்லர் இருபேரும்.


 பின்கட்டாய்க் கட்டியெல்லோ மல்லர் இருபேரும் - இப்போ

பிடரியிலே அடிக்கலுற்றோம் மல்லர் இருபேரும்.


பக்கக் கட்டாய்க் கட்டியெல்லோ மல்லர் இருபேரும் - இப்போ

பளுப்பளுவாய் இடிக்கலுற்றோம்மல்லர் இருபேரும்.


அந்த வானம் கடந்து மல்லர் இருபேரும் - ஒரு

அப்பால் வனம் தான் கடந்தோம் மல்லர் இருபேரும்.


சிங்கம் உறங்கும் வனம் மல்லர் இருபேரும் - இப்போ

சிறு குரங்கு தூங்கும் வனம் மல்லர் இருபேரும்.


கொலைக்களத்தைத் தேடியெல்லோ மல்லர் இருபேரும்

கிழவியைக் கொண்டு வந்து சேர்த்தோமாம் மல்லர் இருபேரும்.

=============


காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 9

சண்முகநாதன் கஜேந்திரன்

மல்லர்கள் வசனம்:

அடியே கிழவி உன் குலதெய்வத்தை நினைத்துக் கழுத்தை நீட்டு. உன்னை வெட்டப் போறோம்.

முத்துமாரியம்மன் வசனம்:

இன்னும் சற்று நேரம் பேசாமல் இருப்பேனேயானால் என்னை வெட்டிப் போடுவார்கள்.

முத்துமாரியம்மன் பாடல்:

சீறி எழுந்தல்லவோ முத்துமாரியம்மன் - உங்களை

சீகிரத்தில் பார்ப்பேனடா மல்லர்களே கேளும். 


நாராசம் காய்ச்சியெல்லோ மல்லர்களே கேளும் - உங்கள்

நடுச்செவியில் வைப்பேனடா மல்லர்களே கேளும். 


செப்பூசி காய்ச்சியெல்லோ மல்லர்களே கேளும் - உங்கள்

திருச்செவியில் வைப்பேனடா மல்லர்களே கேளும். 


பொங்குதடா கோபமெல்லாம் மல்லர்களே கேளும் - எனக்குப்

பொரியுதடா செந்தணலாய் மல்லர்களே கேளும். 


சீமாட்டி பிள்ளை பத்தும் மல்லர்களே கேளும் - நானும்

குலை நெரிய வைப்பேனடா மல்லர்களே கேளும். 



முத்துமாரியம்மன் வசனம்:

அடே! மல்லர்களே என்னை வெட்ட

வந்தனீர்கள் அல்லவா வெட்டி விடுங்கள். 

மல்லர்கள் வசனம்:

வெட்டமாட்டோம் தாயே!

முத்துமாரியம்மன் வசனம்:

எதற்காக?

மல்லர்கள் வசனம்:

இப்போதுதான் தாயார் என்று அறிந்தோம்.

முத்துமாரியம்மன் வசனம்:

சரி சென்று வாருங்கள்.

மல்லர்கள் பாடல்:

அறியாமல் செய்த குற்றம் அம்மாவே -எங்கள்

ஆச்சி பொறுத்திடணை. 


தெரியாமல் செய்த குற்றம் அம்மாவே -எங்கள்

ஆச்சி பொறுத்திடணை. 


அறியாமல் செய்த குற்றம் அம்மாவே -எங்கள்

மாதா பொறுத்திடணை. 


மஅக்கள் நாம் செய்த குற்றம் அம்மாவே -எங்கள்

ஆச்சி பொறுத்திடணை. 


முக்கால் வலமாய் வந்தோ மல்லர் இருபேரும்

அம்மாவை முடி வணங்கித் தெண்டனிட்டோம் மல்லர் இருபேரும்.


நாற்கால் வலமாய் வந்தோ மல்லர் இருபேரும்

அம்மாவை நமஸ்கரித்தே தெண்டனிட்டோம் மல்லர் இருபேரும்.


கும்பிட்டோம் அம்மா என்று மல்லர் இருபேரும்

அம்மாவை கோடி நமஸ்காரம் செய்தோம் மல்லர் இருபேரும்.

முத்துமாரியம்மன் வசனம்:

மல்லர்காள் எழுந்திருங்கள். நீங்கள் சென்று வாருங்கள்....

வைசூரராசன் பட்டணத்தை நீறு பொடியாய் எரித்து விட்டேன்.

இன்னும் ஆட்கள் இருக்கிறார்களோ என்று பார்க்க வேண்டும். அப்படிப் பார்ப்பதாக இருந்தால் இந்த வடிவத்தோடு செல்லக்கூடாது. ஒரு மாம்பழக்காரியைப் போல் வேடம் தாங்கித்தான் செல்ல வேண்டும். 

முத்துமாரியம்மன் பாடல்:

என்ன வடிவெடுத்தா முத்துமாரியம்மன்

எண்ணமற்ற சிந்தையிலே மாரிதேவி அம்மன்.


மாம்பழக்காரியைப் போல் முத்துமாரியம்மன்

மறுவடிவோ தானெடுத்தாள் மாரிதேவி அம்மன்.

முத்துமாரியம்மன் வசனம்:

சரி மாம்பழக்காரி வேசம் எடுத்து விட்டேன். இனி மாம்பழம் விலை கூறி வரவேண்டும்.

முத்துமாரியம்மன் பாடல்:

கொள்வாருண்டோ, கொள்வாருண்டோ பெண்டுகளே - கேளும்

கொண்டு வந்த மாம்பழத்தை பெண்டுகளே வாங்கும்.


பணத்திற்கு மூன்று தாறேன் பெண்டுகளே - கேளும்

இரண்டு சதத்திற்கு ஒன்று தாறேன் பெண்டுகளே வாங்கும்.


நல்ல பழமெடியோ பெண்டுகளே - கேளும்

நல்ல மலிவெடியோ பெண்டுகளே வாங்கும்.

முத்துமாரியம்மன் வசனம்:

மாம்பழம் வாங்கவில்லையோ, மாம்பழம் வாங்கவில்லையோ....

கோப்பிலிங்கி வரவு

கோப்பிலிங்கி வசனம்:

அம்மா! ஆரம்மா மாம்பழம் வேண்டப் போகிறார்கள்? இப்படித்தான் முன்னமொரு கிழவி வந்து, என் பத்தாவும் பிள்ளைகளும் இறந்து விட்டார்கள். அத்துடன் என் பிள்ளைக்கும் சுகமில்லை மாம்பழம் வேண்டாம் அம்மா.

முத்துமாரியம்மன் வசனம்:

சரி மாம்பழம் வாங்காவிட்டால்.... எனக்குத் தாகமாக இருக்கிறது ஏதாவது குடிக்கத் தருவாயா மகளே. 

முத்துமாரியம்மன் பாடல்:

நீர் மோரோ கொண்டுவந்து கோப்பிலங்கி - எனெக்கு

நித்தவிடாய் தீரெனடி.

கோப்பிலங்கி பாடல்:

நீர் மோரோ கொண்டுவந்து அம்மாவே - உந்தன்

நித்தவிடாய் தீர்ப்பேன் அம்மா. 

முத்துமாரியம்மன் பாடல்:

பால் பழமோ கொண்டுவந்து கோப்பிலங்கி - எந்தன்

பசி தாகம் தீரெனடி.

கோப்பிலங்கி பாடல்:

பால் பழமோ கொண்டுவந்து அம்மாவே - உந்தன்

பசி தாகம் தீர்ப்பேன் அம்மா. 

கோப்பிலங்கி வசனம்:

அம்மா பிள்ளையைப் பிடியுங்கள், நீர் மோர் கொண்டு வருகின்றேன். 


===================


காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 10

சண்முகநாதன் கஜேந்திரன்

முத்துமாரியம்மன் வசனம்:

பிள்ளையைத் தாடி மகளே… கோப்பிலிங்கி நீர்மோர் எடுக்கச் சென்றுவிட்டாள். இப்பிள்ளையின் உயிரை எடுத்து ஒரு சிமிளில் அடைத்து வைப்போம், கோப்பிலிங்கிஎன்ன செய்கிறாள் பார்ப்போம்.

கோப்பிலிங்கி வசனம்:

அம்மா இதோ நீர்மோர். பிள்ளையைத் தாருங்கள்.

முத்துமாரியம்மன் வசனம்:

இதோ பிள்ளையைப் பிடி.

கோப்பிலிங்கி வசனம்:

என்னம்மா நான் தரும்போது தட்டிக்குதித்துத் தனபாரம் கொட்டிய பிள்ளை பிரேதம் போல் இருக்கிறது அம்மா?

முத்துமாரியம்மன் வசனம்:

அழுதாப்போல் மூச்சு அடங்கிவிட்டது.

கோப்பிலிங்கி வசனம்:

என்னம்மா! அழுதாப்போல் மூச்சு அடங்கிவிட்டதா? அம்மா ஐயோ அம்மா.

கோப்பிலிங்கி பாடல்:

முந்தித் தவமிருந்தேன் அம்மாவே ­– நானும்

முந்நூறு நாள் சுமந்தேன்.


​அந்தி பகல் நாச்சியாரை அம்மாவே ­– நானும்

அனுதிடமும் நேர்த்தி செய்தேன்.

 

வாதாடி வரம் இருந்தேன் அம்மாவே ­– எந்தன்

வயிற்றில் செளித்த மைந்தன்.

 

கல்லு வைத்த கோவில் எல்லாம் அம்மாவே ­– நானும்

கையெடுத்தோ நேர்த்தி செய்தேன்.

 

மழை மாரி போலிறங்கி அம்மாவே ­– எனக்கு

மகனாக வந்ததம்மா.

 

பாலர் பத்தும் பறிகொடுத்தேன் அம்மாவே ­– எந்தன்

பத்தாவையும் நானிழந்தேன்.

 

ஒற்றை ஒருத்தியம்மா அம்மாவே ­– எனக்கு

ஒருவர் துணை இல்லை அம்மா.

கோப்பிலிங்கி வசனம்:

அம்மா என்னுடன் கொஞ்சம் அழக்கூடாதா?

முத்துமாரியம்மன் வசனம்:

நான் அழுவதாயிருந்தால் கைக்கூலி தரவேண்டும்.

கோப்பிலிங்கி வசனம்:

​கைக்கூலி தருகின்றேன் அழுங்கள் தாயே.

முத்துமாரியம்மன் பாடல்:

கையாலே மகளே கையடித்தோ – எந்தன்

கை இரண்டும் புண்ணாக நோகுதடி.

 

மார்போடே கோப்பிலிங்கி மார்படித்து – எந்தன்

மார்பிரண்டும் புண்ணாக நோகுதடி.

 

கையடித்த கோப்பிலிங்கி கூலியைத்தான் – எந்தன்

காலடியில் கொண்டு வந்து தாவேனடி.

கோப்பிலிங்கி பாடல்:

கையடித்த அம்மா கூலியைத்தான் – உங்கள் 

காலடியில் அம்மாவே தாறேனணை.

முத்துமாரியம்மன் பாடல்:

மார்படித்த கோப்பிலிங்கி கூலியைத்தான் – எந்தன்

மடிமேலே கோப்பிலிங்கி தாவேனடி.

கோப்பிலிங்கி பாடல்:

மார்படித்த அம்மா கூலியைத்தான் – உங்கள்

மடிமேலே கொண்டுவந்து தாறேனணை.

கோப்பிலிங்கி வசனம்:

அம்மா பிள்ளையை வைத்துக் கொள்ளுங்கள், திரவியம் எடுத்து வருகின்றேன்.

முத்துமாரியம்மன் வசனம்:

சரி பிள்ளையைத் தா… கோப்பிலிங்கி பிள்ளையைத் தந்துவிட்டுத் திரவியம் எடுக்கச் செல்கின்றாள். சிமிளில் அடைத்து வைத்திருக்கும் உயிரை இப்பிள்ளையின் கண்ணே பாயவிடுவோம். கோப்பிலிங்கி என்ன செய்கின்றாள் பார்ப்போம்.

கோப்பிலிங்கி வசனம்:

அம்மா இதோ திரவியம் பிள்ளையைத் தாருங்கள். 

அம்மா நான் தரும்போது பிரேதம் போல் இருந்த பிள்ளை இப்போ தட்டிக் குதித்துத் தனபாரம் கொட்டுகிறதே அம்மா.

முத்துமாரியம்மன் வசனம்:

நான் முன்னமே சொல்லவில்லையோ அழுதாற்போல் மூச்சடங்கி விட்டது என்று.

கோப்பிலிங்கி வசனம்:

அம்மா முற்றும் துறந்த ஞானியும் மறப்பரோ மக்கள்மேல் ஆசை என்றபடி, புத்திர சோகமானது யாரைத்தான் விடும் அம்மா.

முத்துமாரியம்மன் வசனம்:

சரி நான் சென்று வருகின்றேன்.

முத்துமாரியம்மன் பாடல்:

அந்தவனம் கடந்து முத்துமாரி அம்மன் – ஒரு

அப்பால் வனம் கடந்தேன் மாரிதேவி அம்மன்.

 

ஆலமரச் சோலை தேடி முத்துமாரி அம்மன் – அவ

அருநிழலில் வந்து நின்றா மாரிதேவி அம்மன்.


=================


காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 11

சண்முகநாதன் கஜேந்திரன்

கோப்பிலிங்கி மாளிகை – சோமசுந்தரம் வரவு

கோப்பிலிங்கி வசனம்:

மகனே சோமசுந்தரம்! நீ இப்பொழுது பாட்டனாரின் பள்ளிக்கூடம் சென்று படித்துவாடா மகனே.

சோமசுந்தரம் பாடல்:

கட்டமுது கட்டியெல்லோ சோமசுந்தரம் – நானும்

கடுகவழி தான் நடந்தார் தம்பியவர் தானும்.

 

சோமன் உடுத்தெல்லவோ சோமசுந்தரம் நானும் – ஒரு

சொருகு தொங்கல் ஆர்க்க விட்டார் தம்பியவர் தானும்.

 

பாட்டனார் பள்ளிக்கூடம் சோமசுந்தரம் தானும் – இப்போ

படிக்கவெல்லோ போறாரம் தம்பியவர் தானும்.

 

அந்தவனம் கடந்து சோமசுந்தரம் தானும் – ஒரு

அப்பால் வனம் தான் கடந்தார் தம்பியவர் தானும்.

 

ஓங்கி வளர்ந்தவனம் சோமசுந்தரம் தானும் – ஒரு

மூங்கில் வனம் தான் கடந்தார் தம்பியவர் தானும்.

 

சிங்கம் உறஙும் வனம் சோமசுந்தரம் தானும் – ஒரு

சிறு குரங்கு தூங்கும் வனம் தம்பியவர் தானும்.

 

ஆலமரச் சோலை தேடி சோமசுந்தரம் தானும் – அவர்

அரு நிழலில் வந்து நின்றார் தம்பியவர் தானும்.

முத்துமாரியம்மன் வசனம்:

மகனே! எங்கு செல்லுகின்றாய்?

சோமசுந்தரம் வசனம்:

தாயார் வீட்டில் இருந்து பாட்டனாரின் பள்ளிக்கூடத்தில் படிக்கச் செல்கின்றேன் அம்மா.

முத்துமாரியம்மன் வசனம்:

மகனே! கையிலே என்ன வைத்திருக்கின்றாய்?

சோமசுந்தரம் வசனம்:

கட்டமுது தாயே!

முத்துமாரியம்மன் வசனம்:

மகனே எனக்கு நாலு ஐந்து நாள் பசி, எனக்கு கொஞ்சம் தரக்கூடாதா?

சோமசுந்தரம் வசனம்:

அம்மா இருவருக்கும் காணாது தாங்களே சாப்பிடுங்கள்.

முத்துமாரியம்மன் வசனம்:

சரி நல்லது தரையை மெழுகடா மகனே.

சோமசுந்தரம் வசனம்:

அப்படியே மெழுகினேன் அம்மா.

முத்துமாரியம்மன் வசனம்:

அன்னத்தைக் கொட்டடா மகனே.

சோமசுந்தரம் வசனம்:

அப்படியே கொட்டினேன் அம்மா.

முத்துமாரியம்மன் வசனம்:

அன்னத்தைக் காலால் உளக்கடா மகனே.

சோமசுந்தரம் வசனம்:

அம்மா அன்னமல்லவா எங்களை வளர்த்தது.

ஆதலால் காலால் உளக்கமாட்டேன். ​

முத்துமாரியம்மன் வசனம்:

நான் பொறுத்துக்கொண்டேன். உளக்கடா மகனே.

சோமசுந்தரம் வசனம்:

அப்படியே உளக்கினேன்.

முத்துமாரியம்மன் வசனம்:

மூன்று திரணையாய் திரட்டடா மகனே.

சோமசுந்தரம் வசனம்:

அப்படியே திரட்டினேன் அம்மா.

முத்துமாரியம்மன் வசனம்:

ஒன்றை எடுத்து எனது வாயில் போடடா மகனே.

சோமசுந்தரம் வசனம்:

அம்மா பயமாய் இருக்கின்றது.

முத்துமாரியம்மன் வசனம்:

என்ன மகனே கண்டாய்?

சோமசுந்தரம் வசனம்:

ஆயிரம் பிராமணர்கள் கூடி அக்கினிப் பொறி மூட்டி எரிக்கிறார்கள்.

முத்துமாரியம்மன் வசனம்:

மகனே எனக்குப் பேன் அதிகம். ஒரு பேன் எடு மகனே.

சோமசுந்தரம் வசனம்:

அம்மா பயமாய் இருக்கின்றது.

முத்துமாரியம்மன் வசனம்:

மகனே என்ன கண்டாய்?

சோமசுந்தரம் வசனம்:

தலையெல்லாம் கண்களாய் இருக்கின்றது.

​முத்துமாரியம்மன் வசனம்:

நான் தான்ஆயிரம் கண்ணுள்ள ஆங்காரமாரி. 

நீ உன் ஊரிலே இறந்தவர்களை எழுப்படா மகனே.

சோமசுந்தரம் வசனம்:

எல்லோரையும் எழுப்புவேன் எனது தந்தையை எழுப்பமாட்டேன்.

முத்துமாரியம்மன் வசனம்:

எதற்காக எழுப்பமாட்டாய்?

சோமசுந்தரம் வசனம்:

அவர் என்னாலேதான் இறந்ததென்று எண்ணி என்னை வெட்டிவிடுவார் அம்மா.

முத்துமாரியம்மன் வசனம்:

அப்பொழுது "வழியில் கண்ட மாதாவே" என்று நினை. அந்த நேரம் வந்து உதவுகின்றேன்,

சோமசுந்தரம் பாடல்:

சுடுகாடு தேடியெல்லோ சோமசுந்தரம் நானும் – இப்போ

சுறுக்குடனே போறாராம் தம்பியரும் நான் தான்.

 

இடுகாடு தேடியெல்லோ சோமசுந்தரம் நானும் – இப்போ

இன்பமுடன் போறாராம் தம்பியரும் நான் தான்.

 

அண்ணன்மாரை எழுப்பவென்றோ சோமசுந்தரம் நானும் – வெகு

அன்புடனே போறாராம் தம்பியரும் நான் தான்.

 

தந்தையாரை எழுப்பவென்றோ சோமசுந்தரம் நானும் – இப்போ

தானோடிப் போறாராம் தம்பியரும் நான் தான்.

சோமசுந்தரம் வசனம்:

அண்ணன்மாரே எழுந்திருங்கள்! தந்தையே எழுந்திருங்கள்!

வைசூரராசன் வசனம்:

அடே சண்டாளா! உன்னால்தான் நாங்கள் எல்லோரும் இறந்தோம். இதோ உன்னை வெட்டப் போகின்றேன்.

வைசூரராசன் பாடல்:

பத்துப் பேருக்கு இளையதொரு என் மகனே பாலா – நீயும்

பாதகனாய் வந்தாயோடா என்மகனே பாலா.

 

சுருள் வாள் எடுத்தல்லவோ என் மகனே பாலா – உன்னை

சுறுக்குடனே வெட்டுறன் பார் என்மகனே பாலா.

 

அடே தப்பிதங்கள் செய்தாயோடா என் மகனே பாலா – உன்

தலையை வெட்டிப் போடுறன்பார் என்மகனே பாலா.

சோமசுந்தரம் பாடல்:

நானும் தப்பிதங்கள் செய்யவில்லை தந்தையரே கேளும்

என் தலையை வெட்டிப் போடவேண்டாம் தந்தையரே கேளும்.

வைசூரராசன் பாடல்:

அடே வஞ்சகங்கள் செய்தாயோடா என் மகனே பாலா

உன்னை வாளாலே வெட்டுறன்பார் என் மகனே பாலா.

சோமசுந்தரம் பாடல்:

நானும் வஞ்சகங்கள் செய்யவில்லை தந்தையரே கேளும்

என்னை வாளாலே வெட்ட வேண்டாம் தந்தையரே கேளும்.

 

தகப்பன் கோபத்தைக் கண்டெல்லவோ சோமசுந்தரம் நானும்

இப்போ வழியில் தாயாரை தான் நினைந்தேன் தம்பியர் தானும்.

 

வழியில் கண்ட மாதாவே பெற்றவளே தாயே – எனக்கு

வந்துதவி செய்யேனம்மா உத்தமியே தாயே.

 

தெருவில் கண்ட மாதாவே பெற்றவளே தாயே – எனக்கு

தரிசனமோ தாவேனம்மா உத்தமியே தாயே.

முத்துமாரியம்மன் வசனம்:

அடே ராசனே! உனது கர்வத்தை அடக்கி மக்களையும் கூட்டிச் சென்று, சந்தோசமாக இராச்சியத்தை ஆளுங்கள். நான் சென்று வருகின்றேன்.

சோமசுந்தரம் பாடல்:

தந்தையாரைக் கூட்டிக்கொண்டு சோமசுந்தரம் - தானும் 

இப்போ தானோடிப் போறாராம் தம்பியவர் தானும்.

 

அண்ணன் மாரைக் கோட்டிக்கொண்டு சோமசுந்தரம் – நானும்

இப்போ அன்புடனே போறாராம் தம்பியவர் தானும்.

 

எல்லோரையும் கூட்டிக்கொண்டு சோமசுந்தரம் நானும் – இப்போ

இன்பமுடன் போறாராம் சபையோரே கேளும். 


===============================


காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 12

சண்முகநாதன் கஜேந்திரன்

நாரதர் வரவு

நாரதர் பாடல்:

சம்போ சங்கர ரட்சக தீசா டாள் பணிந்தேன் கைலாச வாசா

அம்பிகை வாசா ஆனந்தத் தேவா அருள் புரிந்தென்னை ஆளுவாய் நேசா.

 

பரந்த சடையும் முப்புரி நூலும் பஞ்சாட்சரமும் துலங்கவே

நடந்து விசிறி கையினில் ஏந்திய நாரதமுனி தோற்றினார்.

 

காவி உடுத்துக் கணைகள் தொடுத்துக்

கையில் நல்ல விசிறி பிடித்து

தூய புலித்தோல் ஆடை தரித்து

துலங்கு தண்டிகை மாலை அணிந்து

துஷ்ட நாரதர் தோற்றினார்.

நாரதர் வசனம்:

நாராயணா! நாராயணா!

ஒரு நாளைக்கு ஒரு பொய்யாவது சொல்லாவிட்டால் எனது தலை ஆயிரம் சுக்குநூறாய் வெடித்து விடும். இன்றைக்கு இவ்விடம் ஒரு விசேசத்தையும் காணவில்லை. கைலயங்கிரிப் பக்கம் சென்று பார்ப்போம்.

நாராயணா! நாராயணா!

சிவன் வசனம்:

எனது மைத்துனரை நீண்ட நாட்களாகக் காணோம். இன்று அவரை அழைத்து உரையாடிப் பார்ப்போம்…….

கோபாலா! நாராயணா! கண்ணா!

சிவன் பாடல்:

தோளோடே தோள் உதித்த தோள் உதித்த – எந்தன்

தோழமையே வாவேன் கிருஷ்ணா.

 

மார்போடே மார்பணைந்த மார்பணைந்த – எந்தன் 

மைத்துனரே வாவேன் கண்ணா.

 

ஆலிலை மேல் பள்ளி கொள்ளும் பள்ளி கொள்ளும் – எந்தன்

அரிராமா வாவேன் இங்கே.

 

பாம்பணை மேல் பள்ளி கொள்ளும் பள்ளி கொள்ளும் – எந்தன்

பரந்தாமா வாவேன் இங்கே. ​

சிவன் வசனம்:

கண்ணா! மைத்துணா!! அங்கு பார்த்தால் பச்சை நிறம், இங்கு பார்த்தால் நீல நிறம், மணி வண்ணா ஓடிவா!

சிவன் பாடல்:

​பார்க்கின்ற இடங்களில் எல்லாம்- உந்தன்

பச்சை நிறம் தோணுது கண்ணா.

 

நீ நிக்கின்ற இடங்களில் எல்லாம் - உந்தன்

நீல நிறம் தோணுது கண்ணா.

கண்ணா! கண்ணா!! கண்ணா!!!

கிருஷ்ணர் வரவு

கிருஷ்ணர் பாடல்:

பாம்பணையை விட்டிறங்கிக் கிட்டிணரும் நான்தான் – இப்போ

பரந்தாமன் ஓடிவாறேன் மாயவனும் நான்தான்.

 

ஆலிலையை விட்டிறங்கிக் கிட்டிணரும் நான்தான் – அந்த

அரிராமன் ஓடிவாறேன் மாயவனும் நான்தான்.

 

கன்னிகள் துகில் எடுக்கும் கிட்டிணரும் நான்தான் – அந்தக்

கள்வனும் நான் ஓடிவாறேன் மாயவனும் நான்தான்.

 

பாற்கடலில் பள்ளி கொள்ளும் கிட்டிணரும் நான்தான் – அந்தப்

பரந்தாமன் ஓடிவாறேன் மாயவனும் நான்தான்.

 

நீல நிறத்துக்குள்ளே கிட்டிணரும் நான்தான் – இப்போ

நிமிஷமொரு வடிவெடுப்பேன் மாயவனும் நான்தான்.

 

பச்சை நிறத்துக்குள்ளே கிட்டிணரும் நான்தான் – இப்போ

பதினாயிரம் வடிவெடுப்பேன் மாயவனும் நான்தான்.

 

சிவனார் வரவழைத்தார் எந்தனை இப்போது – வெகு

சீக்கிரமாய் போயறிவேன் மாயவனும் நான்தான்.

 

அரணார் வரவழைத்தார் எந்தனை இப்போது – வெகு 

​அன்புடனே போயறிவேன் மாயவனும் நான்தான்.

கிருஷ்ணர் வசனம்:

மைத்துணா! எதற்காக என்னை அவசரமாக அழைத்தீர்கள்?

சிவன் வசனம்:

கோபாலா! உனது தங்கை, எனது மைத்துணி அந்த ஆங்கார மாரி இருக்கிறாள் அல்லவா?

கிருஷ்ணர் வசனம்:

ஆமாம் இருக்கிறாள் மைத்துணா!

சிவன் வசனம்:

அவள் என்னிடம் இருந்த கண்டசுர மாலையை வாங்கியது மட்டுமன்றி அதிலிருந்த நோய்களையும் எனக்கே போட்டாள் மைத்துணா. அது மட்டுமன்றி உலகத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு இடுக்கண் செய்து வருகின்றாள். அவள் அகங்காரத்தை அடக்குவதற்காகவே அழைத்தேன்.

கிருஷ்ணர் வசனம்:

மைத்துணா! நானும் அவள் அகங்காரம் பற்றி அறிந்திருக்கின்றேன். அவள் அகங்காரத்தை அடக்குவதாய் இருந்தால் என்ன செய்ய வேண்டும் மைத்துணா?

சிவன் வசனம்:

அந்த மாரிக்குக் கொடிய சாபங்களை இடவேண்டும் கிருஷ்ணா.

கிருஷ்ணர் வசனம்:

நல்ல யோசனை ஆனால் எவ்வாறான சாபங்களை போடலாம் மைத்துணா?

சிவன் வசனம்:

அவளுக்குப் பிள்ளை இல்லை என்றும், கலியாணாம் இல்லை என்றும் நாம் இருவரும் சாபங்களை போடவேண்டும்,

கிருஷ்ணர் வசனம்:

நல்லது மைத்துணா, நீங்களே முதலில் போடுங்கள்.

சிவன் வசனம்:

சரி நானே முதலில் போடுகின்றேன்.

சிவன் பாடல்:

கலியாணாம் இல்லையென்று – நானும்

கடுஞ்சாபம் போட்டேன் கண்ணா.

கிருஷ்ணர் பாடல்:

மைந்தன் வரம் இல்லையென்று – நானும்

மறுசாபம் போட்டேன் அத்தார்.

சிவன் பாடல்:

பிள்ளை வரம் இல்லையென்று – நானும்

பெருஞ்சாபம் போட்டேன் கண்ணா.

கிருஷ்ணர் பாடல்:

மணமாலை இல்லையென்று – நானும்

மறுசாபம் போட்டேன் அத்தார்.

சிவன் பாடல்:

மலடியோ மலடி என்று – நானும்

மறுசாபம் போட்டேன் கிருஷ்ணா

கிருஷ்ணர் பாடல்:

இருளியோ இருளியென்று – நானும்

இட்டேன் காண் சாபமொன்று.

சிவன் பாடல்:

சந்தானம் இல்லையென்று – நானும்சரியான சாபமிட்டேன்.


================================


காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 13

சண்முகநாதன் கஜேந்திரன்

நாரதர் வசனம்:

நாராயணா! நாராயணா!!

சிவன் வசனம்:

கோபாலா வெளியில் நாரதரின் சத்தம் கேட்கின்றது, போய் அறிந்து வாருங்கள்.

கிருஷ்ணர் வசனம்:

நாரதா எதற்காக வந்தாய்?

நாரதர் வசனம்:

நாடு நகரம் பார்க்கலாம் என வந்தேன்.

கிருஷ்ணர் வசனம்:

வந்து வெகு நேரம் ஆகுமோ?

நாரதர் வசனம்:

இப்பொழுது தான் வந்தேன்.​

கிருஷ்ணர் வசனம்:

நாரதா! நானும் சிவனாரும் கதைத்த கதைகள் ஏதாவது உனக்கு கேட்டிருக்குமா? 

நாரதர் வசனம்:

கேட்டுமிருக்கும் கேளாமலும் இருக்கும்.

கிருஷ்ணர் வசனம்:

அவ்வாறு கேட்டிருந்தால் அவற்றை அந்த மாரிக்கு தெரிவியாது விடுவாயா?

நாரதர் வசனம்:

தெரிவிக்காது விடுவதாய் இருந்தால் சுவாமியின் கழுத்திலிருக்கும் பஞ்சாட்சர மாலையைத் தந்தால் தெரிவிக்க மாட்டேன்.

கிருஷ்ணர் வசனம்:

நாரதா இதோ கொண்டு வருகின்றேன்……

மைத்துணா நாங்கள் அந்த மாரிக்குப் போட்ட சாபங்களை நாரதன் கேட்டு இருக்கிறார்.

சிவன் வசனம்:

மைத்துணா! எங்களைப் போல மடையர் உலகத்தில் எவரும் இல்லை. நாரதர் வந்திருக்கின்றார் என்பதை யோசியாது, அந்த மாரிக்குக் கொடிய சாபங்களைப் போட்டு விட்டோம். இதனால் என்ன துன்பம் நேருமோ….. 

சரி பின் என்ன சொன்னான்?

கிருஷ்ணர் வசனம்:

அந்தச் சாபங்களை மாரிக்குச் சொல்லாது விடுவதாக இருந்தால், தங்கள் கழுத்தில் இருக்கும் பஞ்சாட்சர மாலையைக் கேட்கின்றார்.

சிவன் வசனம்:

சரி இதோ பஞ்சாட்சர மாலை. கொண்டுபோய்க் கொடுத்து, அந்த மாரிக்குச் சொல்லாது தடுத்து வா மைத்துணா.

கிருஷ்ணர் வசனம்:

அப்படியே செய்கிறேன்….

நாரதா, இதோ பஞ்சாட்சர மாலை பெற்றுக்கொள். மறந்தும், மறவாமலும் இந்தச் சாபங்களை அந்த மாரிக்குத் தெரிவிக்க வேண்டாம்,  நான் சென்று வருகின்றேன்.

நாரதர் வசனம்:

அப்படியே செய்கிறேன் சுவாமி….

ஒரு நாளைக்கு ஒரு பொய்யாவது சொல்லாவிட்டால் எனது தலை ஆயிரம் சுக்குநூறாய் சிதறிவிடும், இன்று சிவனாரும், கிருஷ்ணரும் கதைத்த கதைகளை எல்லாம் மாரியிடம் ஓடிப்போய் சொல்லவேண்டும்.

நாரதர் பாடல்:

மாயன் உரைத்த கதை தனையே – அந்த

மாரிக்கெல்லோ ஓடிச் சொல்லப் போறேன்.

 

சிவனார் உரைத்த கதை தனையே – அந்தத்

தேவிக்கெல்லோ ஓடிச் சொல்லப் போறேன்.

 

ஆயன் உரைத்த கதை தனையே – அந்த

ஆச்சிக்கெல்லோ ஓடிச் சொல்லப் போறேன்.

 

அரணார் உரைத்த கதை தனையே – அந்த

அம்மைக்கெல்லோ ஓடிச் சொல்லப் போறேன்.

நாரதர் வசனம்:

நாராயணா! நாராயணா!!

முத்துமாரி மாளிகை

நாரதர் வசனம்:

நாராயணா! நாராயணா!! தாயே நமஸ்கரிக்கின்றேன்.

முத்துமாரியம்மன் வசனம்:

நாரதா எதற்காக வந்தாய்?

நாரதர் வசனம்:

நாடு, நகரம் பார்க்கலாம் என்று வந்தேன்.

முத்துமாரியம்மன் வசனம்:

எப்படி இருக்கின்றது நாரதா?

நாரதர் வசனம்:

நன்றாக இருக்கின்றது தாயே.

முத்துமாரியம்மன் வசனம்:

வேறு ஏதாவது விசேடங்கள் இருக்குமா?

நாரதர் வசனம்:

இருக்கின்றது தாயே.

முத்துமாரியம்மன் பாடல்:

என்ன கோள் கொண்டு வந்தாய் – நாரத மாமுனியே

ஏது கோள் கொண்டு வந்தாய்.

நாரதர் பாடல்:

சொல்லப் பயமாகுதே தோணுதே – எந்தனிற்கு

சொல்லப் பயமாகுதே.

முத்துமாரியம்மன் பாடல்:

வந்ததைச் சொல் முனியே - நாரத மாமுனியே

வந்ததைச் சொல் முனியே.

நாரதர் பாடல்:

சொல்லப் பயமாகுதே தோணுதே – எந்தனிற்கு

சொல்லப் பயமாகுதே.

முத்துமாரியம்மன் பாடல்:

சூது வாது பேசி நாரதா மோசப்பட வேண்டாம்.

சூது வாது பேசி நாரதா மோசப்பட வேண்டாம்.

நாரதர் வசனம்:

சொல்லுகிறேன் தாயே….

உங்கள் மைத்துனரும், தமையனாரும் தங்களிற்குப் பல விதமான சாபங்களைப் போட்டிருக்கின்றார்கள் தாயே.

முத்துமாரியம்மன் வசனம்:

எப்படியான சாபங்கள் நாரதா?

நாரதர் பாடல்:

கலியாணம் இல்லையென்று – கொத்தார் 

கடுஞ்சாபம் போட்டார் அம்மா. 

 

ம்ணமாலை இல்லையென்று – கொண்ணர் 

மறுசாபம் போட்டார் அம்மா. 

 

பிள்ளை வரம் இல்லையென்று – கொத்தார் 

பெருஞ்சாபம் போட்டார் அம்மா. 

 

மைந்தன் வரம் இல்லையென்று – கொண்ணர் 

மறுசாபம் போட்டார் அம்மா. ​

முத்துமாரியம்மன் வசனம்:

நாரதா இதற்கு விமோசனம் உண்டா?

நாரதர் வசனம்:

இருக்கின்றது தெரிவிக்கின்றேன் கேளுங்கள் தாயே. 

நாரதர் பாடல்:

கருத்தின் நல்ல என்னம்மா வலிமையினால் -  நீயும்

ஒரு கலியாண வரம் தாயாரே கேளேனம்மா.

 

கருத்தின் நல்ல என்னம்மா வலிமையினால் -  நீயும்

​ஒரு பிள்ளை வரம் தாயாரே கேளேனம்மா.

நாரதர் வசனம்:

அம்மா இதுதான் உபாயம். நான் சென்று வருகின்றேன் தாயே.

நாராயணா! நாராயணா!! நாராயணா!!!

முத்துமாரியம்மன் வசனம்:

நீ சென்று வா நாரதா….

அத்தாரின் கெட்டித்தனத்தை ஒரு கை பார்க்க வேண்டும். புடையன் பாம்பை வெட்டி, கஞ்சாப்பயிர் உண்டுபண்ணி, அத்தாரின் கெட்டித்தனத்தை ஒரு கை பார்க்கின்றேன்.


=======================



காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 14

சண்முகநாதன் கஜேந்திரன்

முத்துமாரியம்மன் பாடல்:

மந்திரவாள் தானெடுத்தோ முத்துமாரியம்மன் – நானும்

மாட்டிக் கொண்டேன் உறைதனிலே மாரிதேவி அம்மன்

 

திரை – வயல்

 

போகும் வழி தனிலே முத்து மாரி அம்மன் – ஒரு

 புடையன் பாம்பைக் கண்டு கொண்டாள் மாரிதேவி அம்மன்

 

புடையன் பாம்பைக் கண்டல்லவோ முத்துமாரி அம்மன் – பாம்பின்

கழுத்தோடே தானரிந்தாள் மாரிதேவி அம்மன்

 

கழுத்தோடு தானரிந்து முத்துமாரி அம்மன் – பாம்பின்

கண்ணிரண்டும் தோண்டலுற்றாள் மாரிதேவி அம்மன்

முத்துமாரியம்மன் வசனம்

பாம்பினுடைய கண்களை நிலத்திலே புதைக்க வேண்டும்.

முத்துமாரியம்மன் பாடல்:

மண்வெட்டி தானெடுத்தோ முத்துமாரி அம்மன் – மண்ணை

மளமளென்று வெட்டலுற்றேன் மாரிதேவி அம்மன்

 

பாம்புக் கண்ணை உரமாக்கி முத்துமாரி அம்மன் – கஞ்சாப்

பயிர் நாட்டி வளர்க்கலுற்றேன் மாரிதேவி அம்மன்

 

வாய்க்கால் வரம்பு கட்டி முத்துமாரி அம்மன்

வடிவாக நீரிறைத்தாள் மாரிதேவி அம்மன்

முத்துமாரியம்மன் வசனம்:

ஆஹா ! பயிர்கள் எல்லாம் நன்றாக வளர்ந்திருக்கின்றன.

நல்லது, ஒரு பாத்தியில் பூவன் கஞ்சாவும், மறு பாத்த்யில் சடையன் கஞ்சாவும் இருக்கின்றது.

முத்துமாரியம்மன் பாடல்:

கஞ்சா இலை பிடுங்கி முத்துமாரி அம்மன் – இப்போ

கையுறுண்டைசெய்யலுற்றேன் மாரிதேவி அம்மன்.


சிற்றுண்டி வாய்ப்பனொடு முத்துமாரி அம்மன் – நல்ல

சீனிப் பணியாரங்களாம் மாரிதேவி அம்மன்

 

அரியதரம் சுட்டல்லவோ முத்துமாரி அம்மன் – நானும்

அத்தாரிடம் போகலுற்றேன் மாரிதேவி அம்மன்

 

அரனாரைத் தேடியெல்லொ முத்துமாரி அம்மன்

அதி சுறுக்குடனே தான் நடந்தாள் மாரிதேவி அம்மன்

 

சிவனாரின் மாளிகையில் முத்துமாரி அம்மன்– வெகு

சீக்கிரமாய் வந்தும் நின்றேன் மாரிதேவி அம்மன் 

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தாரே! நமஸ்கரிக்கின்றேன்.

சிவன் வசனம்:

அடிப்பாவி, முன்பு போட்ட முத்தின் வேதனை இன்னமும் தீரவில்லை மறுபடியும் ஏன் வந்தாய்?

முத்துமாரியம்மன் வசனம்:

அன்று நடந்ததை இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்களா? அத்தாரே தங்களை நலம் விசாரித்துச் செல்வதற்காக ஒரு விதமான பலகாரத்துடன் வந்திருக்கிறேன்.

சிவன் வசனம்:

அத்தனை கரிசனையா? நம்ப முடியவில்லை. சரி என்ன பலகாரம் கொண்டு வந்திருக்கின்றாய்?

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தாரே! சீனி அரியதுரமும், சிற்றுண்டி வாய்ப்பனும்.

சிவன் வசனம்:

முதலில் உன் அக்காவிற்குக் கொண்டு சென்று கொடுப்பாயாக.

முத்துமாரியம்மன் வசனம்:

அக்காவிற்கும் கொடுத்து விட்டுத்தான் வருகின்றேன்;

சிவன் வசனம்:

சரி, கையில் கொடு பார்க்கலாம்.

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தாரே கையில் கொடுத்தால் கரைந்துவிடும் அத்தாரே.

சிவன் வசனம்:

அப்படியென்றால் எப்படி நீ அதை வைத்திருக்கின்றாய்?

முத்துமாரியம்மன் வசனம்:

பட்டுப் பீதாம்பரத்தில் சுற்றி வைத்திருக்கின்றேன்.

சிவன் வசனம்:

அப்படியானால் என்ன செய்யப் போகின்றாய்?

முத்துமாரியம்மன் வசனம்:

தங்கள் வாயில்தான் போடவேண்டும் அத்தாரே!

சிவன் வசனம்:

சரி போடு பார்க்கலாம்.

(முத்துமாரி சிவனின் வாயில் சிற்றுண்டியை ஊட்டும்போது ஒற்றைத் தும்மல் ஒலித்தல்)

பெண்ணே ஒற்றைத் தும்மலாக இருக்கின்றது.

முத்துமாரியம்மன் வசனம்:

ஒற்றுமைக்குத் தான் அத்தாரே!

சிவன் வசனம்:

யாருக்கும் யாருக்குமிடையே ஒற்றுமை?

முத்துமாரியம்மன் வசனம்:

ஆங்கார மாரிக்கும் ஆதி பரமேஸ்வரனுக்கும் இடையிலான ஒற்றுமை.

சிவன் வசனம்:

சரி இனிப் போடு பார்க்கலாம்.

(முத்துமாரி சிவனின் வாயில் சிற்றுண்டியை ஊட்டும்போது உச்சத்தில் பல்லி சொல்லுதல்)

பெண்ணே உச்சத்தில் பல்லி சொல்கிறதே?

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தாரே உச்சத்தில் பல்லி அச்சமில்லை.

சிவன் வசனம்:

யாருக்கு அச்சமில்லை.

முத்துமாரியம்மன் வசனம்:

எனக்கும் அத்தாருக்கும்.

சிவன் வசனம்:

ஏதேதோவெல்லாம் கூறுகின்றாய் பரவாயில்லை. பெண்ணே போடு பார்க்கலாம்.

(சிறிது இடைவெளிக்குப் பின் சிவனிற்கு தலை சுற்றுதல்)

பெண்ணே, எனது தலை சுற்றுகின்றது. எனது தலையைப் பிடித்து விடு பெண்ணே.

முத்துமாரியம்மன் வசனம்:

அப்படியே பிடித்துவிட்டேன் அத்தாரே.

(முத்துமாரி தனது தலையைப் பிடித்தல்)

சிவன் வசனம்:

அடிபாவி! எனது தலையைப் பிடித்து விடும்படி கூற நீ, உனது தலையைப் பிடிக்கின்றாய்.

முத்துமாரியம்மன் வசனம்: 

எனது தலையைப் பிடித்தால் அத்தாரிற்குத் தலைச்சுற்று நின்று விடும்.

சிவன் வசனம்:

பெண்ணே! எனது நெஞ்சு வலிக்கின்றது. ஒரு முறை என் நெஞ்சைத் தடவிவிடு பெண்ணே!

முத்துமாரியம்மன் வசனம்:

அப்படியே தடவினேன் அத்தாரே!

(முத்துமாரி தனது நெஞ்சைத் தடவுதல்)

சிவன் வசனம்:

அடியே சண்டாளி, எனது நெஞ்சைத் தடவச் சொல்ல உனது நெஞ்சையா தடவுகின்றாய்?

முத்துமாரியம்மன் வசனம்:

எனது நெஞ்சைத் தடவினால் அத்தாரிற்கு சுகம் வரும்.

சிவன் வசனம்:

சிறிது நேரத்தின் பின்) பெண்ணே எனது தலை சுற்றுகின்றது… எனக்கு ஒரு விதமான மயக்கம் வருகின்றது…

முத்துமாரியம்மன் பாடல்:

அத்தார் சுற்றுகிறார் ஆசை அத்தார் சுழலுகிறார் – ஆடும்

பம்பரம் போல் சுழன்று தான் விழுந்தார்.

 

அத்தார் தத்துகிறார் ஆசை அத்தார் தவழுகிறார் – அப்படி

தவண்டு மெல்லோ தரையில்தான் விழுந்தார்.


======================


காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 15

சண்முகநாதன் கஜேந்திரன்

முத்துமாரியம்மன் பாடல்:​​

அத்தார் சுற்றுகிறார் ஆசை அத்தார் சுழலுகிறார் – ஆடும்

பம்பரம்போல் சுழன்றுதான் விழுந்தார்.

 

அத்தார் தத்துகிறார் ஆசை அத்தார் தவழுகிறார் – அப்படி

தவண்டுமெல்லோ தரையில்தான் விழுந்தார்.

 

அத்த மதம் அத்தார்க்குப் பித்தம் பித்தம் – இப்போ

அதிவெறியோ ஆசை அத்தார் கொள்ளுகிறார்.

சிவன் பாடல்:

அத்த மதம் மச்சாளே பித்தம் பித்தம் – எந்தனுக்கு

அதி வெறியோ ஆசை மச்சாள் கொள்ளுதடி.

முத்துமாரியம்மன் பாடல்:

கஞ்சா தின்றதால் பொல்லாத வெறியது  போல் -  அத்தார்

கள் வெறியோ கடுமையாய்க் கொள்ளுகிறார்.

சிவன் பாடல்:

கஞ்சா தின்றதால் பொல்லாத வெறியது போல் – எனக்கு

கள் வெறியோ கன்னி மச்சாள் கொள்ளுதடி. ​

முத்துமாரியம்மன் பாடல்:

அவின் தின்றால் பொல்லாத வெறியது போல் – அத்தார்

அதிவெறியோ மித்தம் மித்தம் கொள்ளுகிறார்.

சிவன் பாடல்:

அவின் தின்றால் பொல்லாத வெறியது போல் –எந்தனுக்கு

அதி வெறியோ ஆசை மச்சாள் கொள்ளுதடி.

 

எடி எண்ணி வந்த மச்சாளே காரியத்தை – எந்தன்

ஏந்திழையே ஆசை மச்சாள் சொல்லேனடி.

​முத்துமாரியம்மன் பாடல்:

எண்ணி வந்த அத்தாரே காரியத்தை – உங்கள்

ஏந்திழையாள் ஆசை மச்சாள் சொல்லுறன் கேள்.

சிவன் பாடல்:

கருதி வந்த மச்சாளே காரியத்தை – எந்தன்

காரிகையே கன்னி மச்சாள் சொல்லேனடி.

முத்துமாரியம்மன் பாடல்:

கருதி வந்த அத்தாரே காரியத்தை – உங்கள்

கன்னி மச்சாள் கவனமாய்ச் சொல்லுறன் கேள்.

சிவன் பாடல்:

நினைத்து வந்த மச்சாளே காரியத்தை – எந்தன்

நீள்விழியாள் மச்சாளே சொல்லனெடி.

முத்துமாரியம்மன் பாடல்:

நினைத்து வந்த அத்தாரே காரியத்தை – உங்கள்

நீள்விழியாள் நினைத்தோ சொல்லுறன் கேள்.

சிவன் பாடல்:

என்ன வரம் பெண்ணே நீ கேட்க வந்தாய் – எந்தன்

ஏந்திழையே கன்னி மச்சாள் சொல்லேனடி.

முத்துமாரியம்மன் பாடல்:

சொல்லவுமோ அத்தாரே வெட்கம் வெட்கம்- எந்தனுக்கு

தோணுது மாரி நான் என்ன செய்வேன்.

சிவன் பாடல்:

வெட்கம் வந்தால் மச்சாளே காரியமில்லை – எந்தன்

வேல் விழியே கன்னி மச்சாள் கூறேனடி.

முத்துமாரியம்மன் பாடல்:

கொஞ்சிக் கொஞ்சி அத்தாரே விளையாட – ஒரு

கொஞ்சும் கிளி தங்களிடம் கேட்க வந்தேன்.

சிவன் பாடல்:

கொஞ்சிக் கொஞ்சி நீயும் விளையாட – நானும்

கொஞ்சும் கிளியாக நானும் வாறேனடி.

முத்துமாரியம்மன் பாடல்:

கட்டிக் கட்டி அத்தார் நான் முத்தமிட- எனக்கொரு

கைக் குழந்தை தங்களிடம் கேட்க வந்தேன்.

சிவன் பாடல்:

கட்டிக் கட்டி மச்சாள் நீ முத்தமிட – நானுமொரு

கைக்குழந்தையாக வாறேனடி.

முத்துமாரியம்மன் பாடல்:

படுத்திருந்தோ அத்தாரே பார்த்திருக்க – பச்சிளம்

பாலகனைத் தங்களிடம் கேட்க வந்தேன்.

சிவன் பாடல்:

படுத்திருந்தோ மச்சாள் நீ பார்த்திருக்க – பச்சிளம்

பாலகனாய் பக்கத்தில் வாறேனடி.

முத்துமாரியம்மன் பாடல்:

அணைத்தணைத்தோ அத்தாரே அருகிருக்க- ஒரு

ஆண்குழந்தை தங்களிடம் கேட்க வந்தேன்.

சிவன் பாடல்:

அணைத்தணைத்தோ மச்சாள் நீ  அருகிருக்க- நானும்

ஆண் குழந்தையாக வாறேனடி.

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தாரே! இதுவரை நேரமும் நகைப்பிற்கல்லவா பொழுதைக் கழித்துவிட்டோம். இனித்தான் முக்கிய விடயத்தைத் தங்களிடம் கூறப் போகின்றேன்.

சிவன் வசனம்:

பெண்ணே! வந்த விடயத்தைக் கூறுவாயாக.​

முத்துமாரியம்மன் பாடல்:

பிள்ளை வரம் அத்தார் வேணுமென்று – இந்தப்

பொற்கொடியாள் மாரி ஓடி வந்தேன்.

 

மைந்தன் வரம் அத்தார் வேணுமென்று – இந்தப்

மாது கன்னி மாரி ஓடி வந்தேன்.

சிவன் பாடல்:

பிள்ளை வரம் பெண்ணே வேணுமென்றால் – நீயும்

பெருந்தபசு மாரி செய்யேனடி. ​

முத்துமாரியம்மன் பாடல்:

பெருந்தபசு மாரி நானிருந்தால் – எனக்குப்

பிள்ளை வரம் அத்தார் தாறதெப்போ?

சிவன் பாடல்:

மைந்தன் வரம் பெண்ணே வேணுமென்றால் – நீயும்

மகதபசோ மாரி செய்யேனடி.

முத்துமாரியம்மன் பாடல்:

மகதபசு மாரி நானிருந்தால் – எனக்கு

மைந்தன் வரம் அத்தார் தாறதெப்போ?

 ​



===========================



காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 16

சண்முகநாதன் கஜேந்திரன்

சிவன் வசனம்:

பெண்ணே! நீ, அந்த வைகைக் கரையோரம் சென்று அங்கே அகோர உன்னத தவம் இருக்க வேண்டும். அவ்வாறு நீ தவமியற்றும் தருணம்  உனது அண்ணரும் எனது மைத்துனருமாகிய மகா விஷ்ணு அழகிய பெண்மானாகவும், இந்த ஆதி பரமேஸ்வரன் அழகிய கலைமானாகவும் உருப் பெற்று....

சிவன் பாடல்:

நானுமொரு பெண்ணே கலையாகி - உந்தன்

தமையன் கிருஷ்ணன் ஒரு மானாகி


​தவத்தடியைப் பெண்ணே தேடி வந்து - நாங்கள்

தருவோமடி சின்ன மான் குழந்தை

முத்துமாரியம்மன் வசனம்:

அத்தாரே எனக்கு மான் குழந்தை எதற்கு?

சிவன் வசனம்:

பெண்ணே உனது  தவத்தடியில் அழுகைக்குரலோடு காட்சிதரும்  அந்த மான்கன்றை உன் திருக்கரங்கள் ஏந்தும் வேளை அது ஓர் அழகிய ஆண் குழந்தையாக மாறி உன்னை மகிழ்விக்கும்.

சிவன் பாடல்:

பிள்ளை என்றோ பெண்ணே நீ எடுக்க - மிக்க

பிரியமுடனே மாரி நீ வளர்ப்பாய்


மைந்தன் என்றோ மகவை நீ அணைத்து - மன

மகிழ்வுடனே மாரி நீ வளர்ப்பாய் 

சிவன் வசனம்:

மாரி! மான் குழந்தையாக வரும் அந்த ஆண் குழந்தையை மகிழ்வோடு அணைத்திடுவாயாக. மங்களம் உண்டாகட்டும். நல்லது,  நான் சென்று வருகின்றேன்.

​முத்துமாரியம்மன் வசனம்:

அத்தார் சொன்ன முறைப்படி வைகைக் கரையோரம் சென்று அத்தாரை நினைந்து தவமியற்ற வேண்டும்.  இதோ வைகைக் கரையோரம் செல்கின்றேன்.

திரை -  ஆற்றங்கரை

திரை -  ஆற்றங்கரை

முத்துமாரியம்மன் பாடல்:

மூன்று குளம் தான் முழுகி முத்து மாரி அம்மன்

முக் கண்ணரைத் தோத்தரித்தேன்


நான்கு குளம் தான் முழுகி முத்து மாரி அம்மன்

நாயகனைப் போற்றி செய்தேன்


ஐந்து குளம் தான் முழுகி முத்து மாரி அம்மன்

அரனாரைத் தோத்தரித்தேன்


அரஹரா என்று சொல்லி முத்துமாரி அம்மன்

அணிந்து கொண்டேன் சிவ ருத்திராட்சம்


சிவ சிவா என்று சொல்லி முத்துமாரி அம்மன் 

திரு நீற்றால் காப்பு மிட்டேன்


சேற்று மணல் தேடி வந்து முத்துமாரி அம்மன்

சிவனாரை உண்டு பண்ணி


ஆற்று மணல் அள்ளி வந்து முத்துமாரி அம்மன்

அரனாரை ஆக்குவித்தேன்

மைந்தன் வரம் வேண்டி முத்துமாரி தவமியற்றல்:

அம்மன் இருந்தாள் அருந்தபசு முத்துமாரி அம்மன்

எழிலுலகம் சோதி மின்ன 


சிவனாரைத் தான் நினைத்தோ முத்துமாரி அம்மன்

சிவதபசு நானிருந்தேன்


அரனாரை அகம் நினைந்து முத்துமாரி அம்மன்

அருந்தபசு தானிருந்தேன்


ஊசி முனை மேலமர்ந்தோ முத்துமாரி அம்மன்

உற்ற தவம் செய்யலுற்றேன் 


கம்பமுனை மீதமர்ந்தோ முத்துமாரி அம்மன்

கடுந்தவமோ செய்யலுற்றேன்


பிள்ளை வரம் வேண்டுமென்று முத்துமாரி அம்மன்

பெருந்தபசு தானிருந்தேன்


மைந்தன் ஒன்று வேண்டுமென்று முத்துமாரி அம்மன்

மகதபசு தானிருந்தேன்


அம்மன் இருந்தேன் அருந்தபசு முத்துமாரி அம்மன்

அகிலமெல்லாம் எதிரொலிக்க 

முத்துமாரி அம்மனின் தவத்தடியில் ஆண்மானாகவும், பெண்மானாகவும் வடிவு கொண்ட சிவபெருமானும், மஹாவிஷ்ணுவும் ஒன்றிணைந்து மான் கன்று ஒன்றினை உற்பவித்து அருள் கொடுத்தல் குழந்தையின் அழுகை ஒலி எதிரொலித்தல்.

​முத்துமாரியம்மன் வசனம்:

எனது தவத்தடியில் ஓர் குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. எதற்கும் தவத்தை விட்டு இறங்கிப் பார்ப்போம்.

முத்துமாரியம்மன் பாடல்:

பூமியிலே காலை வத்து - அம்மன்

போதரவாய்த் தானிறங்கி


மண்மேலே காலை வைத்தோ - அம்மன்

மகிழ்ச்சியுடன் தானிறங்கி


வாரி அணைத்தல்லவே - எந்தன்

வண்ண மடி மேலமர்த்தி


கட்டி அணைத்தல்லவே - நானும்

கன்னமிட்டுக் கொஞ்சலுற்றேன்.

முத்துமாரியம்மன் வசனம்:

ஆஹா! என்ன அழகிய ஆண் குழந்தை. பிள்ளையைத் தாலாட்ட வேண்டும்.



=========================



காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 17

சண்முகநாதன் கஜேந்திரன்

முத்துமாரியம்மன் பாடல்:


ஆரமுதே தம்பி ஆராரோ ஆரிவரோ என் துரையே - நீரும்​

ஆரமுதே கண் வளராய்


தம்பி சீராரும் என் துரையே என் துரையே - நீரும்

செல்வச் சீகாமணியோ?


தம்பி பரமசிவன் வரமதனாய் என் துரையே - நீரும்

​பாலகனாய் வந்தாயோடா


தம்பி இந்திரனோ வானவரோ என் துரையே - நீரும்

எவர்தானோ நானறியேன்.


சந்திரனோ சூரியனோ தம்பியரே - நீரும்

சாதியிலே பிராமணனோ.

முத்துமாரியம்மன் வசனம்:



நல்லது, பிள்ளையைத் தொட்டிலிலே இட்டுத் தாலாட்ட வேண்டும். மல்லர்களை அழைத்து, எனது மைத்துனியாகிய கறுப்பாசியிடம் அனுப்பி, தொட்டில் செய்துவருமாறு பணிக்க வேண்டும்.

”அடே மல்லர்களே....”

மல்லர்கள் வசனம்:

தாயே! அம்மா அழைத்தீர்களா?

​முத்துமாரியம்மன் வசனம்:


ஆமாம். நீங்கள், எனது மைத்துனியாகிய கறுப்பாசியிடம் சென்று எனக்கு ஆண் குழந்தை கிடைத்த விடயத்தைக் கூறி அவரின் கைப்பட அழகிய சிற்பத் தொட்டில் ஒன்றினை உடனடியாகச் செய்வித்து வாருங்கள்.

மல்லர்கள் வசனம்:

அப்படியே செய்கிறோம் அம்மா.

​முத்துமாரியம்மன் பாடல்:


கறுப்பாசி வீடு தேடி மல்லர் இரு பேரும் - இப்போ

கால் நடையாய்ப் போகினமாம் மல்லர் இருபேரும்.

 

திரை - மாளிகை ----- கறுப்பாசி வரவு

மல்லர்கள் வசனம்:

அம்மா! நமஸ்கரிக்கிறோம்.

கறுப்பாசி வசனம்:

அடே மல்லர்களே எழுந்திருங்கள்.

மல்லர்கள் வசனம்:

அம்மா தங்கள் மைத்துனியாகிய மாரியம்மன் இருக்கின்றாரல்லவா? 

கறுப்பாசி வசனம்:

ஆமாம், இருக்கின்றார்.

​மல்லர்கள் வசனம்:


அந்த முத்துமாரி அம்மனுக்கு அழகிய ஆண் குழந்தை கிடைத்துள்ளது. அக் குழந்தையைத் தாலாட்டுவதற்கு, தங்கள் கைகளால் அழகிய சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய தொட்டில் செய்து வருமாறு அனுப்பியுள்ளார் தாயே.

கறுப்பாசி வசனம்:

அப்படியா சங்கதி. மிக்க மகிழ்ச்சி. இங்கேயே நில்லுங்கள், இதோ தொட்டில் செய்து தருகின்றேன்..

கறுப்பாசி பாடல்:


வைர இலுப்பை வெட்டி கறுப்பாசி நானும் - நல்ல

வடிவுருவாய்த் தொட்டில் செய்தேன் கருப்பாசி நானும்


இரணை இலுப்பை வெட்டி கறுப்பாசி நானும் - பாலன்

இருந்தாடத் தொட்டில் செய்தேன் கறுப்பாசி நானும்


கடைச்சற் கால்தான் நிறுத்தி கறுப்பாசி நானும் - நல்ல

புடைப்பான சிற்பம் செய்தேன் தொட்டிலுக்கு நானும்


அன்ன்மொடு மகரங்களை கறுப்பாசி நானும் - இப்போ

அழகாகச் செதுக்கி விட்டேன் தொட்டிலிலே நானும்


தொட்டிலிற்குப் பொன் பூசி கறுப்பாசி நானும் - தொடு

கயிற்றினிற்கு முத்திழைத்தேன்கறுப்பாசி நானும்

கறுப்பாசி வசனம்:


தொட்டில் செய்து விட்டேன். இனி, இவர் ஜாதகத்தைப் பார்ப்போம். பள்ளிப்படிப்பு முடிந்து, தோழமையைத் தேடும் தருணம் கிழக்குத் திசையிலே தொட்டியத்தை ஆழப்போகும் தொட்டியத்து ராஜனே இவரின் நண்பனாக வருவான். இவருக்குத் திருமணம் எங்கே என்று பார்த்தால், தெந்திசையிலே ஆயிரம் சோதரர்க்கு அரியதொரு தங்கையுடனேயே காந்தர்வமணம் இடம்பெறும். இவை யாவற்றையும் இத் தொட்டிலிலே எழுதிவிடுவோம்.

கறுப்பாசி பாடல்:


பாலகனின் ஜாதகத்தை தொட்டிலிலே தானும் - மதி

நுட்பத்துடன் பார்த்தெழுதிகறுப்பாசி நானும்


தொட்டியத்து ராஜனையும் கறுப்பாசி நானும் - நல்ல

தோழமையாய்க் கண்டெழுதி கறுப்பாசி தானும்


ஆரியப்பூ மாலை பெண்ணை கறுப்பாசி நானும் - இவர்

காரிகையைக் கண்டெழுதி கறுப்பாசி தானும்


சம்பங்கித் தேவடியாளை கறுப்பாசி தானும் - அவள்

தாயுடனே கண்டெழுதி கறுப்பாசி நானும்


சாராயப் பூதி பெண்ணை கறுப்பாசி தானும் - நிறை

போதையுடன் கண்டெழுதி கறுப்பாசி நானும் 


நெல்லி மகள் பூமாதை கறுப்பாசி நானும் - நல்ல

துல்லியமாய்க் கண்டெழுதி தொட்டிலிலே தானும்


சற்றேழு கன்னிகளை கறுப்பாசி நானும் - ஒரு

சதிருடனே கண்டெழுதி தொட்டிலிலே தானும்


கழுவெழுதி மழுவெழுதிகறுப்பாசி நானும் - இந்த

ஜாதகத்தை தானெழுதி கறுப்பாசி நானும்

கறுப்பாசி வசனம்:


அடே மல்லர்காள்! இவ்விடம் வாருங்கள். அதோ சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ஜாதகம் பொறிக்கப்பட்ட அலங்காரத் தொட்டில், கவனமாக எடுத்துச் செல்லுங்கள்.

கறுப்பாசி பாடல்:

மல்லரிடம் தொட்டில் தன்னை கறுப்பசி தானும் - மன

மகிழ்வுடனே கொடுத்து விட்டேன் கறுப்பாசி நானும்.



===================



காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 18

சண்முகநாதன் கஜேந்திரன்

மல்லர்கள் வசனம்:

அம்மா! இதோ தொட்டில் கொண்டு வந்திருக்கின்றோம்.​

முத்துமாரியம்மன் வசனம்:

ஆஹா! அழகான தொட்டில். பிள்ளையைத் தொட்டிலிலிட்டு ஆராட்டுவோம்.

 

 தாலாட்டு

முத்துமாரியம்மன் பாடல்:



ஆராரோ ஆரிவரோ தம்பியரே - எந்தன்

ஆரமுதே கண் வளராய்


தங்கப் பொன் தொட்டிலிலே என் துரையே - நீரும்

தலை மகனாய் வந்தாயோடா


முத்துப் பொன் தொட்டிலிலே என் மகனே - நீயும்

முதல் மகனாய் வந்தாயோடா


சிற்ப எழில் தொட்டிலிலே என் மகனே - நீயும்

சிறு மகவாய் வந்தாயோடா


தொட்டில் பிடித்து ஆட்ட தம்பியரே - உனக்குத்

தொண்ணூறு பேர் தாதிமார்கள்


மலடிக்கு ஓர் குழந்தை என் மகனே - நீயும்

மாயவனார் தந்த பிச்சை


இருளிக்கு ஓர் குழந்தை என் துரையே - நீயும்

ஈஸ்வரனார் தந்த பிச்சை


மான் கூட்டம் வருகுதடா தம்பியரே - நீரும்

மறித்து விளையாடுதற்கு


சிங்கக் கூட்டம் வருகுதடா தம்பியரே - நீரும்

சேர்ந்து விளையாடுதற்கு


மயிற்கூட்டம் வருகுதடா தம்பியரே - நீரும்

மகிழ்ந்து விளையாடுதற்கு


ஆராரோ ஆரிவரோ தம்பியரே - எந்தன்

ஆரமுதே கண்வளராய்

 

பொது வசனமும், பாட்டும்

(கங்கை வரும் காட்சியை பின்னணியில் வர்ணித்தல்)

வசனம்:



இப்படியாக முத்துமாரி அம்மன் பிள்ளையை தொட்டிலிலே தாலாட்டிக் கொண்டிருக்கும் தருணம், அந்தத் தாலாட்டானது ஈரேழு உலகமும் அதிரும் படியாக எதிரொலிக்க இதனால் சினம் கொண்ட ஆதி பரமேஸ்வரனும், மஹா விஷ்ணுவும் அந்தத் தொட்டிலையும் பாலனையும் அழிப்பதற்காய் வாயு பகவானை ஏவிவிட, வாயு பகவான் முத்துமாரி அம்மனிடம் சாஸ்டாங்கம் செய்து திரும்பி விட, அக்கினி பகவானை ஏவிவிட, அக்கினி பகவானும் முத்துமாரி அம்மனிடம் சாஸ்டாங்கம் செய்து திரும்பி விட, அதிக சீற்றம் கொண்டு கங்கா தேவியானவள் தொட்டிலையும் பிள்ளையையும் அழித்து விட எப்படி வருகின்றாள் என்றாள்.....

பாட்டு:

அழிக்கிறன் பார் பிள்ளையை என்று - சொல்லி

அலை மோதி இரைந்து வருகிறதே


கல்லோடு கல்லு மோதுப்பட்டு - கங்கை

கடுங்கோபம் கொண்டு வருகுதன்றோ


மண்ணதிரக் கங்கை விண்ணதிர - அந்த

மலையதிர இங்கே வருகிறதே 

வசனம்:



இப்படியாகச் சீற்றம் கொண்டு, தொட்டிலையும் பிள்ளையையும் அழிக்க வரும் கங்கையை தொட்டிலிலே தூங்கிக் கொண்டிருக்கும் பாலகன்  தனது திருவருட் சக்தியினால் எழுந்து என்னமாதிரி அந்தக் கங்கையை மறிக்கின்றான் என்றால்...

 

பால காத்தான் வரவு

பாலகாத்தான் பாடல்:




அஞ்ச வேண்டாம் அம்மா அஞ்ச வேண்டாம் - அந்த

ஆற்றையெல்லோ மகனார் நான் மறிப்பேன்


கலங்க வேண்டாம் அம்மா கலங்க வேண்டாம் - அந்த

கடலையெல்லோ மகனார் நான் மறிப்பேன் 

பாலகாத்தான் வசனம்:

அம்மா எதற்கும் கலங்காதீர்கள். இதோ கங்கையை மறித்து விடுகின்றேன்.

பாலகாத்தான் பாடல்:


ஓடிவந்த அந்த கங்கையைத்தான் - மகனார்

ஒற்றைக் காலாலே அம்மா நான் மறித்தேன்


பாய்ந்து வந்த அந்த கங்கையைத்த்தான் - பாலன்

பக்குவமாய்த் தாயே நான் மறித்தேன்


ஆயனுடை நீயும் சொற்படிக்கோ - இங்கே

அலை மோதிக் கங்கை வந்ததென்ன


மாயனுடை நீயும் சொற்படிக்கோ - இங்கே

மளமளென்று கங்கை வந்ததென்ன


என் தகப்பன் அந்த ஆதி சிவன் - அதனால்

என் சொல்லை நீயும் தட்டாதே


சத்தியத்தை கங்கை கடவாதே - இந்தத்

தரணியிலே நீயும் நில்லும் நில்லும்

பாலகாத்தான் வசனம்:


அம்மா, எங்கள் இருவரையும் அழிக்க வந்த கங்கையை எனது தந்தை ஆதி சிவனின் நாமத்தைச் சொல்லித் தடுத்து விட்டேன் அம்மா, தடுத்துவிட்டேன்.

முத்துமாரியம்மன் வசனம்:


​அப்படியா மகனே! மகனே, எங்கள் இருவரையும் அழிக்க வந்த கங்கையை மறித்து ஆபத்தைக் காத்தமையால் உனக்கு ஒரு விதமான பெயர் வைக்கப் போறேனடா.

பாலகாத்தான் வசனம்:

என்ன விதமான பெயரம்மா?

முத்துமாரியம்மன் பாடல்:



ஆபத்தைக் காத்தனீரே தம்பியரே - எந்தன்

அரும் பயத்தை தீர்த்தனீரோ


ஆபத்துக் காத்தான் என்று என் துரையே - உனக்கு 

அரும் பெயரோ வைத்தேனடா

முத்துமாரியம்மன் வசனம்:

சரி, மகனிடத்தில் சில மழலை மொழிகள் கேட்டுப் பார்ப்போம்.



====================



காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 19

சண்முகநாதன் கஜேந்திரன் 

முத்துமாரியம்மன் பாடல்:

கோதுபடா சின்ன வாய்திறந்து மகனே வாய்திறந்து - உந்தன்

கோகுலத்தை தாய்க்குச் சொல்லேனடா ராசா சொல்லேனடா?

காத்தவராயன் பாடல்:

கோதுபடா சின்ன வாய்திறந்து  அம்மா வாய்திறந்து - எந்தன்

​கோகுலத்தை தாய்க்குச் சொல்லுறன் கேள் அம்மா சொல்லுறன் கேள்.

முத்துமாரியம்மன் பாடல்:

முத்தான சின்ன வாய்திறந்து மகனே வாய்திறந்து - உந்தன்

வித்தாரம் தாய்க்குச் சொல்லேனடா மகனே சொல்லேனடா?

​காத்தவராயன் பாடல்:

முத்தான சின்ன வாய்திறந்து அம்மா வாய்திறந்து - எந்தன்

​​வித்தாரம் தாய்க்குச் சொல்லுறன் கேள் அம்மா சொல்லுறன் கேள்.

முத்துமாரியம்மன் பாடல்:

மாணிக்கம் போல் சின்ன வாய்திறந்து ராசா வாய்திறந்து - உந்தன்

மதன மொழி தாய்க்குச் சொல்லேனடா துரையே சொல்லேனடா?

காத்தவராயன் பாடல்:

மாணிக்கம் போல் சின்ன வாய்திறந்து அம்மா வாய்திறந்து - எந்தன்

மதன மொழி தாய்க்குச் சொல்லுறன் கேள்.

முத்துமாரியம்மன் பாடல்:

செம்பவள சின்ன வாய்திறந்து ம்கனே வாய்திறந்து - உந்தன்

செந்தமிழில் மொழிகள் சொல்லேனடா மகனே சொல்லேனடா?

காத்தவராயன் பாடல்:

செம்பவள சின்ன வாய்திறந்து அம்மா வாய்திறந்து - எந்தன்

செந்தமிழை தாய்க்குச் சொல்லுறன் கேள் அம்மா சொல்லுறன் கேள்.

காத்தவராயன் வசனம்:

அம்மா! எந்தன் அன்னையாகிய தாங்கள், எப்படியான சந்தோசத்தை இப்பொழுது உணர்கிறீர்கள் என்று மகனார் விபரிக்கலாமா தாயே?

முத்துமாரியம்மன் வசனம்:

தெரிவியடா மகனே!

காத்தவராயன் பாடல்:



ஈணா மலடியென்று அம்மாவே - உன்னை

இருளி என்று ஏசாமலே


காயா மலடியென்று அம்மாவே - உன்னைக்

கன்னி என்றும் ஏசாமலே


மான் வயிற்றில் நான் சனித்து அம்மாவே - உனக்கு

மகனாக வந்தேனம்மா


பிள்ளையென்றோ நீ எடுக்க அம்மாவே - உனக்குப்

பிரிய மகன் ஆக வந்தேன்


மைந்தன் என்றோ நீ அணைக்க அம்மாவே - உனக்கு

மகனாகி மகிழ்வு தந்தேன். 

​முத்துமாரியம்மன் வசனம்:

மகனே காத்தவராயா உனக்கோ பாடசாலை செல்லும் பருவம் வந்துவிட்டது. ஆகையால் நீ மாமனார் பாடசாலை சென்று படித்து வரவேண்டும்.

காத்தவராயன் வசனம்:

அம்மா! பாடசாலைக்கா?

காத்தவராயன் பாடல்:




பள்ளிக்கென்னைப் போகச் சொன்னால் பெற்றவளே தாயே

பால் பழமோ உண்ணவில்லை உத்தமியே தாயே


எழுதத் தெரியா விட்டால்  பெற்றவளே தாயே - எனக்கு

எழுதிக் காட்டித் தருவாரில்லை உத்தமியே தாயே


முத்துமாரியம்மன் பாடல்:

எழுதத் தெரியாவிட்டால் என் மகனே பாலா - மாமன்

எழுதிக் காட்டித் தருவாரடா கண்மணியே சீலா 

காத்தவராயன் பாடல்:

படிக்கத் தெரியாவிட்டால் பெற்றவளே தாயே

படித்துக் காட்டி யார் தருவார் உத்தமியே தாயே 

முத்துமாரியம்மன் பாடல்:

படிக்கத் தெரியாவிட்டால் என் மகனே பாலா

படித்துக் காட்டித் தருவாரடா உந்தனது மாமன்

காத்தவராயன் பாடல்:

சொல்லத் தெரியாவிட்டால் பெற்றவளே தாயே

சொல்லிக் காட்டித் தருவாரில்லை உத்தமியே தாயே 

முத்துமாரியம்மன் பாடல்:

சொல்லத் தெரியாவிட்டால் என் மகனே பாலா - மாமன்

சொல்லிக் காட்டித் தருவாரடா கண்மணியே சீலா  ​

​காத்தவராயன் வசனம்:

அம்மா உனக்கு அண்ணர் எனக்கு மாமன் அவர் என்ன செய்வார் தெரியுமா தாயே!

​​முத்துமாரியம்மன் வசனம்:

என்னடா செய்வார் மகனே?

காத்தவராயன் பாடல்:

படிக்கத் தெரியாவிட்டால் பெற்றவளே தாயே - கொண்ணர்

பழுப்பழுவாய் தானடிப்பார் உத்தமியே தாயே

​முத்துமாரியம்மன் வசனம்:

ஒரு போதும் இல்லையடா மகனே

முத்துமாரியம்மன் பாடல்:

படிக்கத் தெரியாவிட்டால் என் மகனே பாலா - அண்ணர்

பக்குவமாய் புகட்டிடுவார் கண்மணியே சீலா

காத்தவராயன் பாடல்:

சொல்லத் தெரியாவிட்டால் பெற்றவளே தாயே - கொண்ணர்

தோப்புக் கரணம் போடச் சொல்வார் உத்தமியே தாயே​

முத்துமாரியம்மன் பாடல்:

சொல்லத் தெரியாவிட்டால் என் மகனே பாலா - அண்ணர்

சொல்லிக் காட்டித் தருவாரடா உந்தனது மாமன் 

காத்தவராயன் பாடல்:

எழுதத் தெரியாவிட்டால் பெற்றவளே தாயே - கொண்ணர்

எடுத்த கம்பால் தானடிப்பார் உத்தமியே தாயே​


=====================



காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 20

சண்முகநாதன் கஜேந்திரன் ​

முத்துமாரியம்மன் பாடல்:

எழுதத் தெரியாவிட்டால் என்மகனே பாலா - அண்ணர்

எழுதிக் காட்டித் தருவாராடா கண்மணியே சீலா.

​முத்துமாரியம்மன் வசனம்:

மகனே காத்தவராயா! நீ ஒன்றிற்கும் பயப்படாது

மாமனார் பாடசாலை சென்று படித்துவாடா மகனே!

காத்தவராயன் வசனம்:

அம்மா. அப்படியென்றால்

காத்தவராயன் பாடல்:

போற்றி வரங் கொடம்மா அம்மாவே - எனக்குப்

பொற் பிரம்பு கைக்கொடம்மா

முத்துமாரியம்மன் பாடல்:

போற்றி வரமும் தந்தேன் என் துரையே - உனக்குப்

பொற்பிரம்பும் கையில் தந்தேனடா

காத்தவராயன் பாடல்:

வாழ்த்தி வரங்கொடம்மா அம்மாவே - எனக்கு

வாளுருவிக் கைக்கொடம்மா

முத்துமாரியம்மன் பாடல்:

வாழ்த்தி வரமும் தந்தேன் என் துரையே - உனக்கு

வாளுருவிக் கையில் தந்தேனடா

​முத்துமாரியம்மன் வசனம்:

மகனே சென்று வாடா

காத்தவராயன் வசனம்:

அம்மா சென்று வருகிறேன்

காத்தவராயன் வசனம்:

மாமனார் பாடசாலை சென்று படித்து வருவதாக இருந்தால், இந்த வேடத்துடன் செல்லக்கூடாது. ஆடை ஆபரணமணிந்து ஆயுததாரியாகத்தான் செல்ல வேண்டும்.


காத்தவராயன் பாடல்:

தூரத்திலே வாறவர்க்கோ காத்தலிங்கம் நானும் - ஒரு சுண்டு

வில்லுக் கைப்பிடித்தேன் மாரி பிள்ளை நானும்


பக்கத்திலே வாறவர்க்கோ காத்தலிங்கம் நானும் - ஒரு 

பார வில்லுக் கைப்பிடித்தேன் மாரி பிள்ளை நானும்


எட்டத்திலே வாறவர்க்கோ காத்தலிங்கம் நானும் - ஒரு 

ஈட்டி ஒன்று கைப்பிடித்தேன் மாரி பிள்ளை நானும்


பாதிரி முல்லை வனம் காத்தலிங்கம் நானும் - நல்ல

பரிய வனம் தான் கடந்தேன் மாரி பிள்ளை நானும்


சில்லென்று பூத்ததொரு காத்தலிங்கம் நானும் - நல்ல

செடியாய் வனம் கடந்தேன் மாரி பிள்ளை நானும்


சிங்கம் உறங்கும் வனம் காத்தலிங்கம் நானும் - நல்ல

சிறு குரங்கு தூங்கும் வனம் இப் பெரிய காடு


அந்த வனம் கடந்தோ காத்தலிங்கம் நானும் - ஒரு 

அப்பால் வனம் தான் கடந்தேன் மாரி பிள்ளை நானும்


ஏடு ஒரு கையில் கொண்டு காத்தலிங்கம் நானும் - எழுத

எழுத்தாணி கைப்பிடித்தேன் சாமி  துரை நானும்


மாமனார் பள்ளிக்கூடம் காத்தலிங்கம் நானும் - மன

மகிழ்ச்சியுடன் போய் வருவேன் சபையோரே கேளும்

 

நடுக்காத்தான் / ஆதிக்காத்தான் வரவு

நடுக்காத்தான் பாடல்:

ஆதிசிவன் மைந்தனல்லோ - நானும்

ஆதிகாத்தான் ஓடி வாறேன்

சபையோரே ஐயா பெரியோரே - நானும்

ஆதிசிவன் மைந்தனல்லோ


சோதி நிலை நின்றெறிக்க - நீயும்

துணை செய்வாய் எந்தனுக்கு

ஆதி சிவமே - பாலன்

வந்தேன் சபைதனில்


கற்ற பெரியோர்களிற்கும் - பாலன்

காரணம் எடுத்துரைப்பேன் சபையோரே

சபையின் பெரியோரே - நானும்

வந்தேன் சபைதனிலே 


வித்துவான் சங்கீதமுண்டு இதில் - நல்லொரு

வினோதமான இராகங்கள் உண்டு

சப்த தாளமும் உண்டு - பாலன்

வந்தேன் சபைதனிலே

நடுக்காத்தான் வசனம்:

அந்த ஆதி பரமேஸ்வரன் தன் திருக்கரத்தில் ஏந்திய.

காத்தவராயன் பாடல்:

சிற்றுடுக்கை நாம் அடித்து - நல்ல

சிங்காரமானதொரு நடை நடந்து

சிந்து நடை நடந்து - பாலன்

வந்தேன் சபைதனிலே

காத்தவராயன் வசனம்:

சபையோர்களே! நானும் என் தோழர்களும் இந் நாடகத்தில் அறியாது விடும் சொற் குற்றம், பொருட்குற்றம், அபிநயக் குற்றம், ஆடை ஆபரணக் குற்றம் எதுவாயிருப்பினும் உங்கள் பிள்ளைகள் ஒரு தவறைச் செய்தால் அதை எப்படி மன்னிப்பீர்களோ அதேபோன்று.

காத்தவராயன் பாடல்:

நாங்கள் அறியாமல் செய்யும் குற்றம்

நீங்கள் எல்லாம் பொறுத்திடுவீர் சபையோரே

​sஅபையின் பெரியோரே - பாலன்

வந்தேன் சபைதனிலே



=====================



காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் – 21

சண்முகநாதன் கஜேந்திரன் ​

காத்தவராயன் வசனம்:

நல்லது. தாயார் சொற்படி மாமனார் பாடசாலை சென்று படித்து வந்துவிட்டேன். இனி எனக்கொரு தோழமையைத் தேடவேண்டும். நாலா திசைகளையும் பார்க்கும்போது கிழக்குத் திசையிலே தொட்டியத்தை ஆழுகின்றான் தொட்டியச்சின்னான். அவனோ சூதில் மகாவல்லவன். அவனிடம் சென்று சூது சொக்கட்டான் ஆடி அவனை வென்று எனது தோழமையாக்க வேண்டும். இதோ அவனிடம் செல்கின்றேன். 

காத்தவராயன் பாடல்:

சோமன் உடுத்தல்லவோ காத்தலிங்கன் நானும் - ஒரு

சொருகு தொங்கல் ஆர்க்கை விட்டேன் மாரி பிள்ளை நானும்


தொட்டியத்தை வெல்லவென்றோ காத்தலிங்கன் நானும் - இப்போ

தோளில் வைத்தேன் வல்லாயுதம் மாரி பிள்ளை நானும்


பாளையத்தை வெல்லவென்றோ காத்தலிங்கன் நானும் - ஒரு

பெரிய கத்தி தோளில் வைத்தேன் மாரி பிள்ளை நானும்


தூரத்திலே வாறவர்க்கோ காத்தலிங்கன் நானும் - ஒரு

சுண்டு வில்லுக் கைப் பிடித்தேன் மாரி பிள்ளை நானும்


பக்கத்திலே வாறவர்க்கோ காத்தலிங்கன் நானும் - நல்ல

பார வில்லுக் கைப் பிடித்தேன் மாரி பிள்ளை நானும்


எட்டத்திலே வாறவர்க்கோ காத்தலிங்கன் நானும் - கூர்மை

ஈட்டி ஒன்று கைப் பிடித்தேன் மாரி பிள்ளை நானும்


சின்னானைத் தேடியெல்லோ காத்தலிங்கன் நானும் - வெகு

சீக்கிரமாய் போகலுற்றேன் மாரி பிள்ளை நானும்

 

தொட்டியத்துச் சின்னான் வரவு

சின்னான் பாடல்:

கறுப்புடுத்துக் கச்சை கட்டி தொட்டியத்து ராஜன் - இப்போ

கள்ளவாள் உறையிலிட்டேன் பாளையத்து ராஜன்


வெள்ளை வெளுத்துக் கட்டி தொட்டியத்து ராஜன் - சிவ

வெண்ணீறும் பூசிக் கொண்டேன் பாளையத்து ராஜன்


எடுத்து வைக்கும் கால்களிற்கோ தொட்டியத்து ராஜன் - ஒரு

எருக்கலம் பூச்சல்லடமாம் பாளையத்து ராஜன்


தூக்கி வைக்கும் கால்களிற்கோ தொட்டியத்து ராஜன் - ஒரு

துந்திப் பூச்சல்லடமாம் பாளையத்து ராஜன்


மாறி வைக்கும் கால்களிற்கோ தொட்டியத்து ராஜன் - ஒரு

மாதுளம் பூச்சல்லடமாம் பாளையத்து ராஜன்


தூரத்திலே வாறவர்க்கோ தொட்டியத்து ராஜன் - இப்போ

தோளில் வைத்தேன் வல்லாயுதம் பாளையத்து ராஜன்


தன்னுடைய மாளிகையில் தொட்டியத்து ராஜன் - இப்போ

தானோடி வீற்றிருந்தேன் பாளையத்து ராஜன்

காத்தவராயன் பாடல்:

சின்னான் அரண்மனையில் காத்தலிங்கன் நானும் - வெகு

சீக்கிரமே வந்து நின்றேன் மாரி மகன் தானும்

காத்தவராயன் வசனம்:

சின்னான்.... ஆங்கார மாரியின் அருந்தவப் புதல்வன் காத்தவராயன் நானேதான். நாடு, நகரம் பார்க்கலாம் என்று வந்தேன். 

சின்னான் வசனம்:

நாடு, நகரம் எப்படி இருக்கிறது அண்ணா?

காத்தவராயன் வசனம்:

நன்றாக இருக்கிறது தம்பி.

சின்னான் வசனம்:

தாங்கள் நீண்ட தூரம் நடந்ததினால் களைத்து விட்டீர்கள் போல் தெரிகிறது. தாகம் தீர நீரருந்தி தாம்பூலம் தரிப்போம் அண்ணா.

காத்தவராயன் வசனம்:

நல்லது அப்படியே ஆகட்டும் தம்பி.

சின்னான் வசனம்:

அண்ணா தண்ணீர் அருந்துங்கள்.

சின்னான் பாடல்:

பாக்கையெல்லோ சின்னான் தானெடுத்து - வெகு

பக்குவமாய்க் காத்தான் கைக்கொடுத்தேன்

காத்தவராயன் பாடல்:

பாக்கையெல்லோ காத்தான் தான் வாங்கி - வெகு

பக்குவமாய் வாயில் போட்டுக் கொண்டேன்

​சின்னான் பாடல்:

வெற்றிலையைச் சின்னான் தானெடுத்து - வெகு

விருப்புடனே காத்தான் கைக் கொடுத்தேன்

காத்தவராயன் பாடல்:

வெற்றிலையைக் காத்தான்தான் வாங்கி - வெகு

விருப்புடனே வாயில் போட்டுக் கொண்டேன் 

சின்னான் பாடல்:

சுண்ணாம்பைச் சின்னான் தானெடுத்து - அதி

சுறுக்குடனே காத்தான் கைக் கொடுத்தேன்

காத்தவராயன் பாடல்:

சுண்ணாம்பைக் காத்தான் தான் வாங்கி - அதி

சுறுக்குடனே நாவில் பூசிக் கொண்டேன் 

​சின்னான் பாடல்:

புகையிலையைச் சின்னான் தானெடுத்து - இப்போ

போதரவாய்க் காத்தான் கைக் கொடுத்தேன்

காத்தவராயன் பாடல்:

புகையிலையைக் காத்தான் தான் வாங்கி - வெகு

போதரவாய் வாயில் போட்டுக் கொண்டேன்

சின்னான் பாடல்:

அடைக்காயும் சின்னான் வெள்ளிலையும் - இப்போ

அள்ளியெல்லோ காத்தான் கைக் கொடுத்தேன் 

காத்தவராயன் பாடல்:

அடைக்காயும் காத்தான்வெள்ளிலையும் - இப்போ

அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டேன் 

சின்னான் பாடல்:

தாம்பூலம் சின்னான் தான் தரித்து - தன்னுடை

சப்ர மஞ்சக் கூடம் வீற்றிருந்தேன் 

காத்தவராயன் பாடல்:

தாம்பூலம் காத்தான் தான் தரித்து - இந்த

சப்ர மஞ்சக் கூடம் தானமர்ந்தேன்.



========================



காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் 22

மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்



காத்தவராயன் வசனம்:

தம்பி, நேரம் வீணாகக் கழிகின்றது. பொழுது போக்கிற்காக ஏதாவது விளையாட்டு விளையாடுவோமா?

​சின்னான் வசனம்:

எப்படியான விளையாட்டு விளையாடலாமண்ணா? சூது, சொக்கட்டான்...

காத்தவராயன் வசனம்:

தம்பி! சூது, சொக்கட்டான் ஆடுவது எளிய வேலையல்லவா?

​சின்னான் வசனம்:

நம்மைப்போன்ற பெரிய ராஜாக்கள் எல்லாம் ஆடும்போது, நாம் ஆடுவதில் தப்பேது அண்ணா?

காத்தவராயன் வசனம்:

சரி அப்படியென்றால் ஆடுவோம். ஆனால் ஒரு நிபந்தனை சூது, சொக்கட்டான் ஆடுவதாயிருந்தால் ஏதும் பந்தயம் வைத்துத்தான் ஆடவேண்டும்.

​சின்னான் வசனம்:

பொழுது போக்கிற்காக விளையாடுவோமென்று கூற்விட்டு பந்தயம் என்கிறீர்கள்? சரி என்ன விதமான பந்தயம் அண்ணா?

காத்தவராயன் வசனம்:

சூதாட்ட முடிவில் உன்னிடம் நான் தோற்றுவிட்டால், எனது நாடு, நகரம் அனைத்தும் உனக்கே தந்து, நானும் உனது தோழமையாக வருவேன். ஒருவேளை நீ என்னிடம் தோற்றுவிட்டால் அதே போன்று எனக்குத் தோழமையாக வரவேண்டும்.

​சின்னான் வசனம்

சரி, அப்படியே ஆகட்டும் அண்ணா. முதலில் நீங்களே ஆட்டத்தை ஆரம்பியுங்கள். 

காத்தவராயன் வசனம்:

தம்பி! நாடு உனது, நகரம் உனது, அரண்மனை உனது ஆதலால் நீயே முதலில் ஆட்டத்தை ஆடுபார்க்கலாம்.

​​சின்னான் வசனம்:

இதோ ஆடுகிறேன் அண்ணா.

சின்னான் பாடல்:

​ஓராட்டம் ஆட்டம் சூதெறிந்து - எந்தன்

ஓராட்டம் அண்ணாவே வெற்றி பாரும்

காத்தவராயன் பாடல்:

ஈராட்டம் ஆட்டம் சூதெறிந்து - எந்தன்

ஈராட்டமும் தம்பியாரே தோற்று விட்டேன் 

சின்னான் பாடல்:

மூவாட்டம் மூவாட்டம் நானெறிந்து - எந்தன்

மூவாட்டமும் அண்ணையாரே வென்றுவிட்டேன்

காத்தவராயன் பாடல்:

நாலாட்டம் நாலாட்டம் நானெறிந்து - எந்தன்

நாலாட்டமும் தம்பியரே தோல்வியடா

சின்னான் பாடல்:

ஐந்தாட்டம் ஆட்டம் சூதெறிந்து - இந்த

ஐந்தாட்டமும் அண்ணாவே வென்றுவிட்டேன்

காத்தவராயன் வசனம்:

தம்பி சின்னான் ஆட்டத்தை நிறுத்து. எதிலுமே தோல்வியைக் காணாத நான் இன்று சூதாடுவதில் அதுவும் உனது மாளிகையில் தோல்வியைச் சந்திது விட்டேன். இதற்குக் காரணம் எனது தாயாரின் திருவிளையாட்டாகத்தான் இருக்கவேண்டும். எதற்கும் ஒருகணம் எனது அம்மாவை நினைந்தபின் மறுபடியும் ஆட்டத்தைத் தொடரலாம்.  

​​சின்னான் வசனம்:

அப்படியே ஆகட்டும் அண்ணா.

காத்தவராயன் வசனம்:

அம்மா! உனது மகன் தோல்வியென்பதை அறியாதவன். இன்று சின்னானிடம் அவனது மாளிகையில் தோல்வியுறுகின்றேன். நின் கடைக்கண் பார்வை என்மீது படவேண்டும் தாயே...

காத்தவராயன் பாடல்:

மலைக்கு மலை நடுவே என் மாரியம்மா

மலையாளத் தேசமம்மா அம்மா தேசமம்மா


மலையாளத் தேசத்திலே என் மாரியம்மா

விளையாடப் பெண் பிறந்தாய் அம்மா நீ பிறந்தாய்


சின்னானுடை மாளிகையில் என் மாரியம்மா

சிதைந்து நான் வாடுகின்றேன் அம்மா வாடுகின்றேன்


மைந்தன் நான் வாடுவது என் மாரியம்மா

உந்தனுக்கு கேட்கலையோ அம்மா கேட்கலையோ


பாலன் நான் வருந்துகின்றேன் என் மாரியம்மா

பத்தினியே வாவேனம்மா வந்து வரம் கொடம்மா


அந்தரித்த வேளை அம்மா என் தாயாரே

வந்து அருள் தாவேனணை அம்மா அருள் கொடம்மா


பந்தயத்தில் நான் ஜெயிக்க என் மாரியம்மா

பகடையாய் வாவேனம்மா அம்மா வரம் கொடம்மா


சொக்கட்டான் வெல்வதற்கு என் மாரியம்மா

பக்க பலம் நீ தருவாய் தேவி துணை தருவாய்

முத்துமாரி அம்மன் வசனம்:

மகனே காத்தவராயா உனக்கு வரம் தந்து பக்கபலமாக நான் இருக்கிறேன். நீ ஆட்டத்தைத் தொடர்வாயாக.

காட்சிக்குறிப்பு:

முத்துமாரி அம்மனின் இவ்வசனம் பின்னணியிலிருந்து அசரீரியாகவும் ஒலிக்கலாம் அல்லது முத்துமாரி அம்மன் அரங்கில் தோன்றியும் வரம் அளிக்கலாம்.

காத்தவராயன் வசனம்:

அப்படியே செய்கிறேன் தாயே. சின்னான் இனி ஆட்டத்தைத் தொடர்வாயாக. 

சின்னான் பாடல்:

சொக்கட்டான் சொக்கட்டான் போட்டல்லவோ - எந்தன்

சூதுகளை முற்றாகத் தோற்றுவிட்டேன் 

காத்தவராயன் பாடல்:

சொக்கட்டான் சொக்கட்டான் போட்டல்லவோ - உந்தன்

சூதுகளை முற்றாக வென்றேனடா 

சின்னான் பாடல்:

பகடையெல்லோ பகடை நானெறிந்து - எந்தன்

பந்தயங்கள் முற்றாகத் தோற்று விட்டேன் 

காத்தவராயன் பாடல்:

பகடையெல்லோ பகடை நானெறிந்து - எந்தன்

பந்தயங்கள் முற்றாக வென்றேனடா



===============



காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் 23

மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்

காத்தவராயன் வசனம்:

தம்பி, சூது சொக்கட்டானில் நீ தோற்று விட்டாய். எமது பந்தயத்தின் படி உனதுநாடு, நகர் அனைத்தும் எனக்குத் தந்து நீயும் எனது தோழமையாக  

வரவேண்டும்.

​​சின்னான் வசனம்:

அண்ணா,தங்கள் தோழமையாக அடியேன் வருவதற்கு, நான் தத்தம் பண்ணித்தர வேண்டும். கானகம் சென்று கங்கை நீர் எடுத்து வாருங்கள். ​

காத்தவராயன் வசனம்:

இதோ கொண்டுவருகின்றேன்... ​​

​​​சின்னான் வசனம்:

காத்தவராயர் தண்ணீர் எடுக்கச் சென்று விட்டார். காட்டிலுள்ள குன்று, குளம் கேணி யாவற்றிலும் தண்ணீர் இல்லாது போகக்கடவது. ​

காத்தவராயன் வசனம்:

என்ன ஆச்சரியம்! குன்று, குளம், கேணி யாவற்றிலும் தண்ணீர் இல்லை. இது  அந்த சின்னானுடைய விளையாட்டாகத்தான் இருக்கவேண்டும். அவன் செய்தகெட்டித்தனத்திற்கு நானுமோர் பதில் கெட்டித்தனம் செய்கின்றேன் இதோ  சின்னானிடம் செல்கின்றேன்

 

திரை அரசவை

​​​​சின்னான் வசனம்:

​அண்ணா, தண்ணீர் கொண்டு வந்துவிட்டீர்களா?

காத்தவராயன் வசனம்:

சின்னான் செய்யிறதையும் செய்துவிட்டு பாசாங்கு காட்டுறாயா? ​

​​​​சின்னான் வசனம்:

நான் என்ன செய்தேன் அண்ணா?

​காத்தவராயன் வசனம்:

எனக்குத்தான் தண்ணீர் இல்லாமல்  செய்தாய்  பரவாயில்லை . காட்டிலுள்ள  அத்தனை மிருக ஜாதிகளிற் கெல்லாம் தண்ணீர் இல்லாமல்செய்து விட்டாயே?என்ன அநியாயம்.

​​​​சின்னான் வசனம்:

காட்டிலுள்ள மிருக ஜீவன்களிற்கு அண்ணாவா தண்ணீர் வைப்பது? ​

​காத்தவராயன் வசனம்:

படுபாதக வேலை செய்து  விட்டு  பரிகாசமா  செய்கின்றாய்?  நீ  செய்த  வேலைக்கு எனது வலது கால் பாதரட்சையால்  உன்  முன்வாய்ப்பல்லை  உடைத்து  அதில்  வரும்  இரத்தத்தில்  தத்தம்  பண்ண  வைக்க  வேண்டும்போல்  இருக்கின்றது.  ஆனாலும்  நீ,  எனது  பிரியத்திற்குரிய  தோழமையாக  என்னோடு  பயணிக்கவேண்டியிருப்பதால்  உன்னை  விடுகிறேன்.

​​​​சின்னான் வசனம்:

அண்ணா பகிடிக்குச் சூதாடி விட்டு எனது பல்லை உடைக்கப் பார்க்கின்றீர்களே?  அண்ணா!  உங்கள்  உயிர்  நண்பனாக  உற்ற நல்தோழனாக என்றுமே கை கொடுப்பேன். ​

 

திரை- வீதி குடியானவர் வருகை ​

குடியானவர் பாடல்: ​

ஐயா போச்சே ஐயா போச்சே ஐயா! ஐயாவே 

​மகராசாவே எங்கள் பயிர்பாழாய்ப் போச்சுதையா 


நட்டுவைத்த கத்தரியை ஐயாவே மகராசாவே -

அந்தக் குறுக்காலை போன நரி நடுவாலே பிரிச்சுக் கொண்டோடுதையா.


படையோடை பண்டி  வந்து  ஐயாவே  மகராசாவே - 

பனம் பாத்தியை  இடறிக் கொண்டோடுதையா 


குட்டிக்குரங்கு வந்து ஐயாவே மகராசாவே - 

என்ர  குஞ்சாச்சியை  இழுத்துக்  கொண்டோடுதையா 


பெரியதொரு யானைவந்து ஐயாவே மகராசாவே - 

என்ர  பெண்டாட்டியைத்  துாக்கிக்கொண்டு  ஓடுதையா 


போச்சுதையா போச்சே ஐயா!

ஐயாவே மகராசாவே-எங்கள் | பயிர்பாழாய்ப் போச்சுதையா

 

திரை - அரசவை

குடியானவர் வசனம்:

ஐயா, முறையோ, முறை! மகாராசா, முறையோ முறை! ​

​காத்தவராயன் வசனம்:

சின்னான், குடிமக்களின் அவலக்குரல் கேட்கிறது, சென்று பார்த்து வா

​​​​சின்னான் வசனம்:

அப்படியே செய்கிறேன் அண்ணா மக்களே! உங்களுக்கு என்ன நடந்தது

குடியானவர் வசனம்:

ஐயா, காட்டு விலங்குகள் எல்லாம் நாட்டிற்குள் புகுந்து, பயிர்களையும் நாசம் செய்து எங்களையும் துன்புறுத்துகிறது ஐயா... ​

​​​​சின்னான் வசனம்:

குடியானவர்களே! நீங்கள் ஒன்றிற்கும் பயப்படாது சென்று வாருங்கள். நாங்கள் கானகம் சென்று அவ் விலங்குகளை வேட்டையாடி வீழ்த்துகின்றோம். ​

குடியானவர் வசனம்:​

சரி ஐயா, நாங்கள் போய் வருகின்றோம்.

​​​​சின்னான் வசனம்:

அண்ணா காட்டு மிருகங்கள் எல்லாம் நாட்டிற்குள் புகுந்து குடிமக்களிற்குத் தொந்தரவு பண்ணி வருகிறது.

​காத்தவராயன் வசனம்:

நீ செய்த வேலையால் மிருக ஜாதிகள் எல்லாம் நாட்டிற்கள் வருகின்றது. 

சின்னான்,  இப்பவே  நாங்கள் கானகம்  சென்று  அந்தக்  கொடிய  மிருகங்களை  வேட்டையாடி  எமது  மக்களைக்  காப்பாற்ற  வேண்டும்  நீவேட்டைக்குரிய ஆயுதங்களை தயார்ப்படுத்துவாயாக.சீக்கிரம்!

​​​​சின்னான் வசனம்:

இதோ அப்படியே செய்கிறேன் அண்ணா.

​​​​சின்னான் -​காத்தவராயன் வசனம்:​​

கானகத்தைத் தேடியெல்லோ தம்பி இருபேரும் இப்போ கால் நடையாய்ப் போகினமாம் தம்பி இருபேரும். 



=========================



காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் 24

மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்

 

திரை - வனம்

 

வேடுவன் வரவு

வேடுவன் பாடல்:

வேட்டையிலே விருப்பம் கொண்டு

வில்லம்பு தான் கையில்க் கொண்டு

காட்டினிலே வேட்டையாடக்

​கவண் வேடன் நானும் வந்தேன்

வேடுவன் வசனம்:

நீண்ட நேரமாக அலைகின்றேன் மிருகங்கள் ஒன்றும் சிக்கவில்லை. சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம். அதோ, வருகிறது கூட்டம்...

வேடுவன் பாடல்:

ஓடுது பார் வேகமதாய் ஒரு கணைக்ககப்பட மானினமே

​பன்றிகள் பலபல குட்டியைக் கூட்டிக் கொண்டு


(ஓடுது பார்.....]

காத்தவராயன் வசனம்:

​சின்னான் அதோ பார் ஓர் வேடுவன் ஓடி வருகின்றான். அவனுக்குப் பரீட்சயமான காடாகத்தான் இது இருக்கும். ஆதலால் அவனின் உதவியுடன் வேட்டையாடுவோம் வா.

சின்னான் வசனம்:

​அப்படியே செய்வோம். வாருங்கள் அண்ணா. வேடுவனை அணுகுவோம். ​

காத்தவராயன் வசனம்:

வேடுவனே, நீ இந்த வனத்திலே நீண்ட காலம் வேட்டையாடி வருபவன் போல் தெரிகிறதே? ​

வேடுவன் வசனம்:

​ஆமாம் மகாராசா, என் வாழ்க்கையே இந்த வனந்தான். ​

காத்தவராயன் வசனம்:

​அப்படியென்றால் எங்களோடு சேர்ந்து வேட்டையாட முடியுமா? ​

வேடுவன் வசனம்:

​தங்கள் உத்தரவு. அப்படியே செய்கிறேன் மகாராசா. ​

காத்தவராயன் வசனம்:

​​வேடுவனே அதோ பார் ஓர் மலை அங்கு சென்றால் என்ன வேட்டை ஆடலாம்? ​

வேடுவன் வசனம்:

​ஐயா! அது உச்சமலை அங்கு போனால் உடும்பு வேட்டை ஆடலாம். ​

சின்னான் வசனம்:

​வேடுவனே இதோ தெரிகிறது ஓர் மலை இங்கு சென்றால் என்ன வேட்டையாடலாம்?

வேடுவன் வசனம்:

​மகாராசா, இது பச்சை மலை இங்கு சென்றால் பன்றி வேட்டையாடலாம். ​

காத்தவராயன் பாடல்:

​உச்ச மலை மலைச் சாரலிலே காத்தான் நான் உடும்பு வேட்டை சுழன்று ஆடுறன் பார்

சின்னான் பாடல்:

பச்சை மலை மலை மீதேறி சின்னான் நான் பன்றி வேட்டை பதுங்கி ஆடுறன் பார்

வேடுவன் பாடல்: ​

கரிய மலை மலைச் சாரலிலே வேடன் நான் கரடி வேட்டை வேட்டை சுழன்றாடுறன் பார்

காத்தவராயன் பாடல்:

புல்லாங்கிரிச் சிகரம் மீதேறி காத்தான் நான் புலி வேட்டை ஒதுக்கி ஆடுறன் பார்

சின்னான் பாடல்:

குன்று குளம் சின்னான் ஏறி இறங்கி - இப்போ குருவி வேட்டை குறித்து ஆடுறன் பார்

வேடுவன் பாடல்: ​​

வெள்ளி மலை மலை மீதேறி வேடன் நான் விருது வேட்டை விரும்பி ஆடுறன் பார்

​காத்தவராயன் பாடல்:

மான் கூட்டம் மலைமேல் வருகுதல்லோ - இப்போ மறித்து வைத்தோ மடக்கி ஆடுறன் பார்

சின்னான் பாடல்:

சிங்கக் கூட்டம் அண்ணாவே வருகுதல்லோ சின்னான் நான் இங்கிதமாய் இருந்து ஆடுறன் பார்

​காத்தவராயன் வசனம்:

​நீண்ட நேரம் வேட்டையாடியதால் களைத்து விட்டோம். ​

​காத்தவராயன் பாடல்:

வேட்டையெல்லோ காத்தான் ஆடியதால் களைத்து வீற்றிருந்தேன் நடுக்கானகத்தே

சின்னான் பாடல்:

வேட்டையெல்லோ சின்னான் நானாடி வியர்த்து வீற்றிருந்தேன் நடுக்கானகத்தே

வேடுவன் பாடல்: ​​

வேட்டையெல்லோ வேடன் ஆடியதால் அலுத்து வீற்றிருந்தேன் இந்தக் கானகத்தே

​​காத்தவராயன் வசனம்:

தம்பி, எனக்குத் தாகமாக இருக்கிறது. எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்து வருவாயா? ​

சின்னான் வசனம்:

இருங்களண்ணா, பார்த்து வருகிறேன் வேடுவனே இங்கே எங்காவது தண்ணீர் கிடைக்குமா? ​

வேடுவன் வசனம்:

ஐயா, அதோ ஓடுகிறது ஓர் அருவி அங்கே சென்று தாகம் தீர நீரருந்துங்கள். ​

சின்னான் வசனம்:

​சரி, வேடுவனே.

அண்ணா அதோ ஓடுகிறது ஓர் அருவி. அங்கே சென்று நீர் அருந்தலாம் வாருங்கள்.

​​​காத்தவராயன் வசனம்:

​அப்படியே ஆகட்டும் தம்பி.

(இருவரும் நீர் அருந்துதல்)


======================



காத்தவராயன் சிந்து நடைக் கூத்து

தொடர் 25

மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்

​​​காத்தவராயன் வசனம்:

தம்பி சின்னான், இந்த நீரிலே ஒரு விதமான   நறுமணம் வீசுகிறதல்லவா?

சின்னான் வசனம்:

அண்ணா, அப்படி எதுவும் எனக்குத் தெரியவில்லயே.

​காத்தவராயன் பாடல்:

மஞ்சளெல்லோ சின்னான் மணக்குதடா -எனக்கு 

​மதிமயக்கம் தம்பி கொள்ளுதடா

சின்னான் பாடல்:

மஞ்சளெல்லோ அண்ணா மணக்குதென்று - ​நீங்கள் 

​மதிமயக்கம் அண்ணா கொள்ள வேண்டாம்

​காத்தவராயன் பாடல்:

அத்தரெல்லோ தம்பி மணக்குதடா - எனக்கு 

ஆனந்த மயக்கம் வருகுதடா

சின்னான் பாடல்:

​அத்தரிங்கு அண்ணா மணக்கவில்லை -நீங்கள் 

​அதி மயக்கம் அண்ணா கொள்ள வேண்டாம்

​காத்தவராயன் பாடல்:

​புனுகுமெல்லோ ராசா மணக்குதடா -எனக்கு 

​புன் முறுவல் மெல்லப் பூக்குதடா

சின்னான் பாடல்:

புனுகுமெல்லோ புனுகு மணக்கவில்லை -தங்கள் 

​புன் சிரிப்பு ஏனோ நானறியேன்

​காத்தவராயன் பாடல்:

​ஆர் குளித்த இந்தப் பொய்கையடா -நீயும் 

​அறிந்து வந்து துரையே சொல்லேனடா

சின்னான் வசனம்:

அண்ணா இவ்விடத்தில் அமருங்கள் இது யார் குளித்த பொய்கையென்று  வேடுவனிடத்தில் அறிந்துவருகின்றேன். 


​வேடுவனே! இந்தப் பொய்கையில் யார் வந்து நீராடுவது?

​வேடுவன் வசனம்:

ஐயா, ஆயிரம் பேருக்கு அரியதோர் தங்கை ஆரியப்பூமாலை நீராடும் 

பொய்கை தான் இது.

​சின்னான் வசனம்:

ஓகோ..... அப்படியா சங்கதி. 


​அண்ணா...

சின்னான் பாடல்:

ஆயிரம் பேரிற்கு அரிய தங்கை - அழகு 

ஆரியப்பூ மாலை குளித்த பொய்கை

காத்தவராயன் வசனம்:

தம்பி, ஆரியப் பூமாலை குளித்த பொய்கை இவ்வளவு வாசனை என்றால்   அந்த ஆரியப் பூமாலை எப்படி இருப்பாள்.  

எதற்கும் அந்த வேடுவனிடம் விசாரிப்போம் வா. வேடுவரே இந்தப் 

பொய்கையிலே தினமும் நீராடும் அந்த ஆரியப் பூமாலையின் 

அழகு வடிவை சற்று விவரிக்க முடியுமா?

வேடுவன் வசனம்:

​ஐயா, 

அந்தமங்கை இங்கே நீராடுவதற்குப் பலத்த பாதுகாப்புடனேயே வருவாள்.  

சில வேளை மிருகங்கள் ஏதாவது  விக்கினங்கள் செய்தால் என்னை 

அழைத்து வேட்டையாடச் செய்வார்கள். 

அப்படியான வேளைகளில் அந்த அரசிளங்குமாரியை நான் 

பார்த்திருக்கின்றேன்.

காத்தவராயன் பாடல்:

கூந்தலுமோ மாலைக்கு எவ்வளவு - ​எந்தன் 

கோதையவள் மாது எவ்வழகு

​வேடுவன் பாடல்: ​​

​எல்லாருடை ஐயாவே கூந்தலுந்தான் - அங்கே 

ஒரு முழமாம் ஐயாவே இருமுழமாம்

அந்த ஆரியப்பூமாலை கூந்தலுந்தான் - என்னாலை 

அளவிடவோ ஐயா முடியுதில்லை

காத்தவராயன் பாடல்:

மேற்புருவம் வேடுவனே எவ்வழகு - எந்தன் 

​மெல்லியலாள் மாலை எவ்வழகு

வேடுவன் பாடல்: ​​

மேற்புருவம் ஐயாவே சொல்லுறன் கேள் - நல்ல 

​வேப்பமிலை அழகுச் சாயலைப்போல்

காத்தவராயன் பாடல்:

மேற்புருவம் வேடுவனே இவ்வழகு - அவளின் 

​நெற்றியும் தான் வேடுவா எவ்வழகு

வேடுவன் பாடல்: ​​

நெற்றியெல்லோ ஐயாவே சொல்லுறன் கேள் - அந்த 

​நிலவினது மூன்றாம் பிறையது போல்

காத்தவராயன் பாடல்:

கண்ணழகோ மாலைக்குச் சொல்லேனடா - அந்தக் 

​கன்னிகையின் அழகைக் கூறேனடா

வேடுவன் பாடல்: ​​

கண்ணழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - அழகுக் 

கருங்குவளை மலரின் சாயலைப் போல்

காத்தவராயன் பாடல்:

கண்ணழகோ கன்னிக்கு இவ்வழகு - அவளின் 

​சொண்டழகை வேடுவனே சொல்லேனடா

வேடுவன் பாடல்: ​​

சொண்டழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - அந்த 

சோலைக் கிளி சிவந்த சொண்டது போல்

காத்தவராயன் பாடல்:

சோலைக்கிளி மாலை இவ்வழகு - அவள் 

​பல்வரிசை பார்த்துச் சொல்லேனடா

வேடுவன் பாடல்: ​​

பல்லழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - நல்ல 

​பவளமது கோர்த்து நிரைத்தது போல்

காத்தவராயன் பாடல்:

மூக்கழகோ வேடுவனே எவ்வழகு - எந்தன்

 மொய் குழலாள் மாலை எவ்வழகு

​வேடுவன் பாடல்: ​​

மூக்கழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - அந்த 

​மூங்கிலது ஐயாவே முளையது போல்

காத்தவராயன் பாடல்:

கழுத்தழகோ மாலைக்கு எவ்வழகு - எந்தன் 

​கண்மணியாள் மாது தான் எவ்வழகு

வேடுவன் பாடல்: ​​

கழுத்தழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - இளம் 

கதலி வாழை அழகுத் தண்டது போல்

காத்தவராயன் பாடல்:

கழுத்தழகோ வேடுவனே இவ்வழகு - எந்தன் 

கன்னி நல்லாள் மாலை எவ்வழக்கு

வேடுவன் வசனம்: ​​

ஐயா ஆரியப் பூமாலையின் ஒவ்வொரு அங் அசைவுகளையும் இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் ஐயா. நீங்களும் கேட்டுக் கோண்டே போகலா ஐயா. மொத்தத்தில் இத்தனை அழகும் நிறைய பெற்றவள் தான் அந்த ஆரியப்பூமாலை.

காத்தவராயன் பாடல்:

மாலை தரித்தவளோ வேடுவனே சொல்லாய் 

​மாங்கல்யம் சூடினளோ வேடுவனே பாராய்

வேடுவன் பாடல்: ​​

மாலை தரிக்கவில்லை மாது கன்னி மாலை

மாங்கல்யம் சூடவில்லை ஐயாவே பாராய் ​

​காத்தவராயன் பாடல்:

கூறை அணிந்தவளோ ஆரியப்பூமாலை 

​குங்குமம் தரித்தவளோ வேடுவனே சொல்லாய்

வேடுவன் பாடல்: ​​

கூறை அணியவில்லை ஐயாவே கேளாய்-அவள் 

​குங்குமம் தரிக்கவில்லை ஐயாவே பாராய்

காத்தவராயன் பாடல்:

மஞ்சள் தரித்தவளோ ஆரியப்பூமாலை 

​மணமாலை ஏற்றவளோ வேடுவனே கூறாய்

வேடுவன் பாடல்: ​​

இன்னும் மணமாகவில்லை ஐயாவே கேளாய் 

​மணமாலை ஏற்கவில்லை ஐயாவே பாராய்

வேடுவன் வசனம்:

ஐயா! அந்த ஆரியப்பூமாலையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதையா? அவள் என்ன செய்வாள் தெரியுமா?

காத்தவராயன் வசனம்:

​என்ன செய்வாள் வேடுவனே?

வேடுவன் பாடல்: ​​

போனால் விடமாட்டாள் ஐயா ஐயாவே கேளாய் - அவள் 

​போட்டிடுவாள் பெருவிலங்கு ஐயாவே பாராய்

காத்தவராயன் பாடல்:

போனவுடன் புருஷன் என்று ஆரியப் பூமாலை 

​போற்றி முத்தம் தான் தருவாள் எந்தனது மாலை

வேடுவன் பாடல்: ​​

கண்டால் விடமாட்டாள் ஐயா ஐயாவே கேளாய் - அவள் 

​கட்டிவைத்தோ விலங்கிடுவாள் ஐயாவே பாராய்

காத்தவராயன் பாடல்:

கண்டவுடன் கணவன் என்று ஆரியப்பூமாலை 

​கட்டி முத்தம் தான் தருவாள் ஆரியப்பூமாலை

வேடுவன் வசனம்:

ஐயா, என்னவோ யோசித்து செய்யுங்கள். எனக்கு நேரமாகுது. நான் சென்று வருகின்றேன்.



======================




Tags:

No Comment to " காத்தவராயன் சிந்து நடைக் கூத்து "